கஷ்மீர் மனித உரிமை போராளிக்கு ஜெனீவா செல்ல தடை

0

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் கூட்டத்திற்கு செல்வதை விட்டு கஷ்மீரி மனித உரிமை ஆர்வலரான குர்ரம் பர்வேஸ் டில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளார்.

39 வயதான இவர், தான் ஜெனீவா செல்ல முற்படுகையில் விமான நிலையத்தின் குடியேற்றத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு விமான நிலையத்திலேயே ஒன்றரை மணிநேரம் காக்க வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தனது போர்டிங் பாஸில் பயணம் மேற்கொள்ள முத்திரை இட்டபின்னும் தன்னை பயணிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இவர் Asian Federation Against Involuntary Disappearances என்கிற அமைப்பின் தலைவராவார்.

தன்னிடம் விமான நிலைய அதிகாரிகள், உளவுத்துறையிடம் இருந்து வந்த தகவலின் படி தான் ஜெனீவா செல்ல முடியாது என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். அவருடன் பணியாற்றும் வழக்கறிஞர் பர்வேஸ் இம்ரோஸ் மற்றும் கார்த்திக் முருகுட்ளா ஆகியோர் ஜெனீவாவிற்கு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப் பட்டதாகவும் தன்னை மட்டும் விமான நிலைய அதிகாரிகள் தடுத்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் கைது செய்யப்படவில்லை என்றும் ஆனால் தான் இந்த பயணத்தை மேற்க்கொள்ளக் கூடாது என்று அதிகாரிகள் வெறும் வாய் வழித் தகவலாக தெரிவித்தனர் என்று அவர் கூறியுள்ளார்.

ஐநாவின் மனித உரிமை அமைப்பின் கூட்டத்திற்கு செல்ல இருந்த கஷ்மீர் பிரதிநிதிக் குழு ஐ.நா. மனித உரிமை கழகத்திடம் கஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விவரிக்க இருந்தது குறிப்படத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை துணை ஆணையர் பிரபாகர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Comments are closed.