கஷ்மீர்: 8 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த காவல்துறை அதிகாரியை விடுவிக்க கோரும் ஹிந்து ஏக்தா மன்ச்

0

பாஜக வுடன் தொடர்புடைய வலது சாரி இந்து அமைப்பான ஹிந்து ஏக்தா மன்ச் என்கிற அமைப்பு, 8 வயது சிறுமையை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தீபக் கஜுரியா என்ற காவல்துறை அதிகாரியை விடுவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த காவல்துறை அதிகாரி 8 வயது நாடோடி பெண்ணை கடத்தி 7 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்துள்ளார். பின்னர் அந்தப்பெண்ணை அவர் கொலை செய்துள்ளார்.

சட்டத்திற்கு புறம்பாக பெண்கள், குழந்தைகளுடன் கூடிய அந்த கும்பல் தேசிய கோடி ஏந்தி பாரத் மாதா கி ஜெய் என்றும் வந்தே மாதரம் மற்றும் மேலும் பல கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, குதிரைகள் மேய்த்துக்கொண்டிருந்த சிறுமியை கஜுரியா மற்றும் மற்றொரு சிறுவனும் சேர்ந்து கடத்தியதாகவும் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அச்சிறுமியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கதுவாவில் உள்ள ரசானா காடுகளில் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றச்செயல் குறித்து யாரிடமாவது கூறினால் அந்த சிறுவனின் பெற்றோரை கொன்று விடுவதாக அவனிடம் கஜுரியா மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பெண் காணமால் போனது குறித்த வழக்கு காவல்துறையிடம் வந்த போது அப்பெண்ணை தேடும் பொறுப்பு கொடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் கஜுரியாவும் ஒருவர். இது காவல்துறையின் அசட்டையான செயலா அலல்து குற்றங்களை மறைக்க காவல்துறை எடுத்த நடவடிக்கையா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்னும் தப்ரோது குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி தீபக் கஜுரியா ஹிந்து ஏக்தா மன்ச் அமைப்பின் உறுப்பினர் என்றும் கூறப்படுகிறது. இந்த அமைப்பு தங்களை சமூக நல அமைப்பு என்று கூறிக்கொண்டுள்ளது . சமூக வலைதளமான ட்விட்டரில் பாஜக வின் அனைத்து முக்கிய தலைவர்களையும் பின்தொடரும் இந்த அமைப்பு புனேவைச் சேர்ந்த மிலிந்த் எக்போடே என்பவரால் துவக்கப்பட்டது. இதன் முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் பாஜகவினரே இருந்துள்ளனர்.

“தங்களை ஹிந்து ஏக்தா மன்ச் என்று கூறிக்கொள்ளும் இந்த அமைப்பு வெறும் ஒரு முகமூடி தான். இதற்கு பின்னால் பாஜக தங்களது அரசியல் திட்டங்களை வைத்துக்கொண்டு மறைந்துள்ளது. நீதியை விரும்பும் எந்த ஒரு இந்துவும் கற்பழிப்பையும் கொலையையும் விரும்ப மாட்டான்.’ என்று ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவ அமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் செஹ்லா ரஷித் தெரிவித்துள்ளார். இன்னும், “தற்போதைய இந்த ஹிந்து ஏக்தாமன்ச் அமைப்பின் போராட்டம், தீபக் கஜுரியாவை கைது செய்தபின் வலது சாரி இந்து அமைப்புக்கள் நடத்திய பல போராட்டங்களில் ஒன்று. முதல்வர் மெஹ்பூபா முஃப்தியே ஹிந்து வலதுசாரி அமைப்புகளால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீற்கெடுவதை தடுக்க முடியாத தனது நிலை குறித்து மறைமுகமாக தெரிவிக்கும்படி இந்த போராட்டங்கள் அமைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மெஹ்பூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் பேரணி கண்டு அதிர்ச்சியாக உள்ளது. இதில் கொடூரம் என்னவென்றால் தேசியக் கொடியை இந்த போராட்டங்களில் பயன்படுத்தியது தான். தேசிய கொடியை அவமதிப்பதில் எவ்விதத்திலும் இது குறைவு அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுவிட்டார். சட்டத்தின் பணி தொடரும்.’ என்று பதிவு செய்துள்ளார்.

ஆனால் முஃப்தியின் இந்த பதிவிற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் தான் இந்த குற்றத்தை செய்தான் என்று அனைவரும் நம்பியதாகவும் இருந்தும் அரசு இவ்வழக்கை குற்றப்பிரிவிற்கு மாற்றியுள்ளது என்று பாஜக செயலாளர் விஜய் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் கஜுரியா மற்றும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு முன் விரோதம் உள்ளது என்றும் அந்த அடிப்படையில் காவல்துறை இதனை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் முஃப்தி இந்த பிரச்னையை அரசியல் ஆக்க பார்கிறார் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த கொலை குறித்த முதற்கட்ட விசாரணை நாடோடி மக்களிடைய அதிருப்தி ஏற்படுத்தியிருந்தது. தற்போது தீபக் கஜுரியாவின் கைதுக்கு பிறகு அவர்கள் தாங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். இன்னும் இவர்களின் குடிநீர் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டதாகவும் உணர்வதாக கூறப்படுகிறது.

Comments are closed.