கஸ்டடி மரணங்கள் மீது தாமாக முன்வந்து பொது நலவழக்கு தொடர்ந்த 16 உயர்நீதிமன்றங்கள்

0

நாட்டில் நடைபெறும் கஸ்டடி மரணகளுக்குத் தீர்வு காண 16 உயர் நீதிமன்றங்கள் தாங்களாக முன் வந்து பொதுநல வழக்குகள் பதிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் தேதி அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், 2012 இற்குப் பிறகு சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறையில் மரணித்தவர்களின் உறவினர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத நிலையில் அதனை வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிபதி மதன் B லோகுர், மற்றும் நீதிபதி தீபக் குப்தா அடங்கிய பென்ச்சிடம் கல்கத்தா உயர் நீதிமன்றம், மெட்ராஸ் உயர்நீதிமன்றம், குஜராத், ராஜஸ்தான் உயர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட எட்டு உயர் நீதிமன்றங்கள் கஸ்டடி மரணங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 16 உயர் நீதிமன்றங்கள் சிறையில் ஏற்படும் கஸ்டடி மரணங்கள் தொடர்பாக தாமே முன்வந்து பொது நல வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, நாட்டில் உள்ள 1382 சிறைகளில், நிலவும் கொடுமையான சூழ்நிலைகளை குறித்த வழக்கு ஒன்றை விசாரித்தபோது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கஸ்டடி மரணம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரிவிக்காத 8 நீதிமன்றங்கள் அது குறித்து கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அந்நீதி மன்றங்களின் தலைமை பதிவார்களுக்கு நீதிமன்றத்தின் தலைமை செயலாளர் மூலம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 15 ஆம் தேதி கஸ்டடி மரணங்கள் பெரும் குற்றம் என்றும் அவை கைதிகளின் உயிர் மற்றும் சுதந்திரந்த்தில் அரசு காட்டும் வெளிப்படையான அலட்சியம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் குறித்தும் சிறை சீர்திருத்தங்கள் குறித்தும் பல வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதுடன் சிறையில் இருந்து விடுவிக்கக் உத்தரவிடப்பட்ட பல கைதிகள் இன்னும் சிறையில் வாடுவது குறித்து தனது அதிர்ச்சியையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Comments are closed.