காங்கிரஸ் கட்சியின் பசு அரசியல்!

0

காங்கிரஸ் கட்சியின் பசு அரசியல்!

கதர் ஆடைக்குள் காவியை அணிந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்று கூறுவதுண்டு. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் பசுவை அறுத்ததாக குற்றம்சாட்டி மூன்று முஸ்லிம்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம்(என்.எஸ்..) சுமத்தப்பட்டுள்ள சம்பவம் மேற்கண்ட கூற்றைத்தான் நினைவுபடுத்துகிறது. மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் பசு மாடு கொல்லப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து நதீம், ஷக்கீல், அஃஸம் ஆகிய மூன்று முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதுதான் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் சுமத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

பசுவின் பெயரால் இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களால் அவர்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. மதச்சார்பற்ற கட்சி என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மதச் சிறுபான்மையினரை வேட்டையாடும் அட்டூழியத்திற்கு முடிவு கட்டப்படும் என்ற நம்பிக்கையில் மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கைக் கொண்டவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் வாக்களித்தனர். பசுவின் பெயரால் இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை பிரச்சார கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தும் வந்தனர். ஆனால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் பா...வின் பாதையை காங்கிரஸ் கட்சி பின் தொடர ஆரம்பித்துள்ளது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பசுவதை தடைச் சட்டம் என்பது தீவிர இந்துத்துவ செயல்திட்டமாகும். பசு வெறுமொரு விலங்கினம் அல்ல, மாறாக, மிகுந்த மரியாதை அளிக்கவேண்டிய தெய்வாம்சம் பொருந்திய, மனித உயிரை விட மதிப்பு மிக்க விலங்கு என்பதே இந்துத்துவாவினரின் நம்பிக்கையாகும். இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாக மாற்றுவதற்கு உறுதி பூண்ட இந்து மகா சபை 1800களின் இறுதியில் இந்த வாதத்தை எழுப்பியது. இந்து புராணங்களோ, வேத நூல்களோ அங்கீகரிக்காத, வெறுமொரு ஐதீகத்தின் பெயரில் கற்பிக்கப்பட்ட புனிதத்தன்மையை நம்பி பல மாநிலங்களும், அண்மையில் தேசிய அளவிலும் பசுவதை கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டது. பசுவின் மீதான மதிப்போ, மரியாதையோ காரணமல்ல, மாறாக அதனை ஒரு அரசியல் ஆயுதமாக கருதியே பா... பசு பாதுகாப்பு என்ற செயல் திட்டத்தை கையில் எடுத்தது.

இதனை புரிந்துகொள்ளாத பல காங்கிரஸ் தலைவர்களும் அதன் பின்னால் செல்வது முரண்நகையாகும். காங்கிரஸ் கட்சியின் இந்துத்துவ சாய்வு என்பது அண்மைகாலத்தில் உருவான கொள்கை மாற்றமல்ல. சுதந்திர போராட்ட காலக்கட்டத்திலேயே காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் இந்துத்துவ கொள்கைகளுக்கு ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் அவர்கள் துவக்கம் முதலே இந்துத்துவாவின் நிலைப்பாட்டிற்கு அனுகூலமாகவே இருந்தனர். நரசிம்ம ராவின் ஆசியோடு தான் இந்துத்துவ பயங்கரவாதிகள் பாபரி மஸ்ஜிததை இடித்து தள்ளினர். பாபரி மஸ்ஜித்தின் இடிப்புக்கு நரசிம்மராவே காரணம் என்று பின்னர் காங்கிரஸ் கட்சி தலைவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். பா... அரசியலில் பலம் பெறுவதற்கு முன்பே பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பசுவதை தடைச் சட்டத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பா...வில் உள்ள பல எம்.பி. மற்றும் எம்.எல்..க்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியவர்களே. காங்கிரஸ் கட்சி கடைபிடிக்கும் மிதவாத இந்துத்துவ அணுகுமுறைதான் இவர்கள் பா...வில் ஐக்கியமாவதற்கு தூண்டுகோலாக அமைந்தது.

அதேவேளையில் சுசில்குமார் ஷிண்டே, மணிசங்கர் அய்யர் முதலான இந்துத்துவாவை கடுமையாக விமர்சிக்கும் மதச்சார்பற்றவாதிகளும் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அவர்களது குரல்கள் பலகீனமாகவே ஒலிக்கின்றன. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மிதவாத இந்துத்துவ அணுகுமுறை காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்களில் பெரும்பான்மையினர் வகுப்புவாதத்தை வெறுக்கும், நாட்டின் பன்முகத்தன்மையை ஆதரிக்கும் மக்கள் என்பதை காங்கிரஸ் கட்சி மறந்து விடக்கூடாது. மத்திய பிரதேச அரசின் தவறான செயல்பாடுகளை காங்கிரஸின் தேசிய தலைமை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதன் விளைவு காங்கிரஸ் கட்சிக்கே பாதகமாக அமையும்.

Comments are closed.