காசர்கோடு மதரஸா ஆசிரியர் கழுத்தறுத்து கொலை: மூன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கைது

0

கேரளா மாநிலம் காசர்கோட்டில் உள்ள சூரி என்ற பகுதியில் மதரஸா ஆசிரியர் ரியாஸ் கொலை வழக்கில் மூன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஆர்எஸ்எஸ் அமைப்பின் அஜேஷ் என்ற அப்பு, அகில், மற்றும் நிதின் ஆகியோரை இந்த வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளது.

இந்த கொலையை தாங்கள் தான் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கை விசாரித்த குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழு சம்பவம் நடந்த மசூதிக்கு சென்று தடயங்களை ஆராய்ந்துள்ளது.

இஸ்ஸத்துள் இஸ்லாம் மதரஸா வில் ஆசிரியராக பணியாற்றிய 34 வயது ரியாஸ் என்ற ஆசிரியரை அவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது கழுத்தை அறுத்து அஜேஷ் என்றவன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மசூதியின் தலைமை இமாமான அப்துல் அஜீஸ் முசலியார், மதரஸா ஆசிரியர் தங்கியிருந்த அறையில் அதிகாலையில் சப்தங்களை கேட்டதாகவும் அவர் அங்கு செல்ல முற்படுகையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கற்களை கொண்டு அவரை தக்கியதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் அருகில் இருக்கும் மக்களுக்கு பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அவர் தகவல் அளித்துள்ளார். மக்கள் அங்கு வந்து சேரும் முன்பு கொலைகாரர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த ஆசிரியர் ரியாஸின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Comments are closed.