காதல் திருமண எதிர்ப்பு: இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்!

0

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகன் பெரியசாமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பவளி என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

பவளி, திருச்சி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த காதல் விவகாரம், பவளி வீட்டாருக்கு தெரிந்ததால், பவளிக்கு வேறொருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த செய்தி அறிந்த பவளி, தனது காதலனிடம் தெரிவித்ததை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு இருவரும் சென்று விட்டனர்.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை பெரியசாமியின் தாய் செல்வி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பவளியின் தந்தை “உன் மகன் என் மகளை எங்கு வைத்துள்ளான்” என்று கூறி செல்வியை கடுமையாக திட்டி அங்கு இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்த போலீசார், செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், பவளியின் தந்தையை கைது செய்துள்ளதாகவும் தெரிகிறது.

Comments are closed.