காந்தியை துளைத்த தோட்டாக்கள் இன்னும் மிச்சமிருக்கிறது

0

காந்தியை துளைத்த தோட்டாக்கள் இன்னும் மிச்சமிருக்கிறது

1948 ஜனவரி 30 மாலை 5 மணி, டெல்லியிலுள்ள பிர்லா மாளிகையில் பிரார்த்தனை கூட்டத்தில் நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதியால் தேசத் தந்தை காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இந்துத்துவ அமைப்பின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். கோட்சே தூக்கிலிடப்பட்டான். இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு பின்புலமாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த சம்பவங்களும், ஆதாரங்களும் இன்றும் வரலாற்றில் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த வரலாற்றை திருத்தி அமைக்கும் வேலையில் சங்பரிவார கும்பல்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

தற்போது அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பாட புத்தகங்களில் காந்தியின் கொலை குறித்த வரலாற்றை உண்மைக்கு மாற்றாக திரித்து கற்பித்து வருகின்றனர். காந்தி உயிருடன் இருந்த போது இவர்களின் கொள்கைக்கு எதிராக இருந்து வந்தார். அவரின் கொள்கைகளை பின்பற்றுபவர்களும் இவர்களுக்கு தடையாகவே தெரிகின்றனர். காந்தியை கொலை செய்த கோட்சேவையும், அதற்கு மூளையாக இருந்த சாவர்க்கரையும் மாவீரர்களாகவும், தேசப்பற்றாளர்களாகவும் எழுத துவங்கிவிட்டனர். எனவே காந்தி படுகொலையின் உண்மையை நாம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

காந்தி கொலையில் சாவர்க்கர்

சாவர்க்கரை சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிக்க சங்பரிவார கூட்டம் பெரும் முயற்சி செய்து வருகிறது. தற்போது அமித்ஷா சாவர்க்கரை முன்னிறுத்தி அதிகம் பேசி வருகிறார். எந்த அளவிற்கு என்றால் அந்தமான் சிறையில் அவர் இருந்த போது அவரை காந்தியடிகள் நேரில் சென்று சந்தித்தாகவும், சாவர்க்கர் சிறையில் துவக்கிய சுத்தி இயக்கத்தை காந்தி ஆதரித்தார் என்றும் சொல்லி வருகின்றனர். ஆனால் காந்தி சாவர்க்கரை சிறையில் சந்திக்கவில்லை. மாறாக, தன்னை விடுவிக்க அரசாங்கத்திற்கு காந்தி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார் சாவர்க்கர். மன்னிப்பு கடிதங்களை எழுதி சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்ட பிறகு ரத்தனகிரிக்கு சென்று காந்தி சந்தித்தார். அப்பொழுது சாவக்கரின் சுத்தி இயக்கம் தொடர்பான தனது எதிர் கருத்தை பதிவு செய்தார் காந்தி.  இன்று ஆர்.எஸ்.எஸ். செய்து வரும் கர் வாப்ஸி வேலையை அன்று சுத்தி இயக்கத்தின் மூலமாக சாவர்க்கர் செய்து வந்தார். மாறாக சுதந்திரப் போராட்டத்திற்கான இயக்கம் அதுவல்ல என்பதை வரலாறு பதிவு செய்கிறது.

ஏன் காந்தியை கொலை செய்ய சாவர்க்கர் திட்டம் தீட்டி கொடுக்க வேண்டும்? “வாளின் வலிமை என்ற கோட்பாட்டில் நம்பிக்கையும் முஸ்லிம்களை இந்துக்களின் ஆதிக்கத்தில் வைக்கும் கொள்கையும் காந்திக்கு உடன்பாடில்லை. அவர் வகுப்புவாத அரசியலுக்கு மாற்றமானவர். அவர் ஓர் காங்கிரஸ்வாதி” என்றார் சாவர்க்கர். இந்த முரணே பின்னாளில் இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ன் கொலை திட்டமிடலுக்கு காரணமானது. ஆனால் காந்தி கொலையில் மூளையாக செயல்பட்ட சாவர்க்கர் வழக்கில் இருந்து தப்பித்தாலும் வரலாற்றில் இருந்து தப்ப முடியாது. காந்தியின் கொலையில் சாவர்க்கரின் சதியை யாராலும் மறுக்க முடியாது.

காந்தியினை கொலை செய்ய திட்டமிட்டு 1948 ஜனவரி 1ம் தேதி அவர் தங்கியிந்த பிர்லா மாளிகையினை குண்டு வைத்து தகர்க்கின்றனர். இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் நடந்து முடிந்த உடனே அப்போதைய பம்பாய் மாகாண உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் சாவர்க்கரின் நடவடிக்கையை கவனிக்கும்படியும் குண்டுவெடிப்பில் தொடர்புடைய விஷ்னு கர்கரேயை கைது செய்யும்படியும் காவல் துறைக்கு உத்தரவிடுகிறார். மொரார்ஜி தேசாய் மட்டுமல்லாது அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல், காந்தி கொலையில் சாவர்க்கரின் தொடர்பை நேருவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். “இந்து மகா சபையிலுள்ள வெறிபிடித்த பிரிவொன்று காந்தியைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி அதில் வெற்றி பெற்றுவிட்டது. அந்தப்பிரிவு சாவர்க்கரின் நேரடி தலைமையின் கீழ் இயங்குகிறது” என்று நேருவுக்கு தெரிவித்தார்.

1965ல் மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன்லால் கபூர் தலைமையிலான விசாரணை ஆணையத்தை நியமித்தது. இதில் காந்தி கொலை வழக்கில் கிடைக்கப் பெறாத புதிய சாட்சியங்கள் கிடைத்தன. அதில் முக்கியமானது சாவர்க்கரின் மெய்க்காப்பாளன் ராமசந்திரா காசரின் வாக்குமூலம். இவன் காந்தி கொலை வழக்கில் அப்போதே சாட்சி அளித்திருந்தால் சாவர்க்கர் தண்டிக்கப்பட்டிருப்பார் என்று அந்த ஆணையம் அறிக்கை தந்தது. காந்தி கொலை வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்பொழுது தண்டனை பெற்ற அனைவரும் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிக்கு முன்பே சாவர்க்கரின் காலில் விழுந்து வணங்கினார்கள். சாவர்க்கர் காந்தியை கொலை செய்ய மூலகாரணகர்த்தாவாக இருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் நீதித்துறையின் பார்வைக்கு வராது போனதற்கான காரணங்கள் ஏன் என்பது தெரியவில்லை.

ஆர்.எஸ்.எஸ்.ன் உருவாக்கமே கோட்சே

“டாக்டர் ஹெட்கேவர் நாக்பூரில் உரை நிகழ்த்தும் போது நான் கலந்து கொண்டேன். அவரது பேச்சாற்றல் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த சங்கத்தில் நான் தொண்டனாக சேர்ந்தேன். அதன் அறிவுசார்துறையில் நான் பணியாற்றினேன். இந்துக்களின் உரிமைக்காக பாடுபட்டு வந்தபோதும், நியாயமான உரிமைக்காக அரசியலில் இறங்க வேண்டியதை கருதி நான் இந்து மகாசபையில் இணைந்தேன். ஆனாலும் நான் ஆர்.எஸ்.எஸ்.காரன்”. கோட்சே சொன்ன வார்த்தைகள் இவை. சங்கபரிவார பாசிஸவாதிகள் கோட்சே ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் இல்லை என்று சொல்லி வந்தனர். தற்போது அவரை உயர்த்தி பிடிப்பதை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.காரன் இல்லை என்று கூறி வந்தது ஒரு தப்பிக்கும் வழிமுறையே அன்றி வேறொன்றுமில்லை. “காந்தி கொலை செய்யப்படும் போது கூட கோட்சே ஆர்.எஸ்.எஸ்.ன் பௌதிக் கார்யவாஹ் என்ற பொறுப்பு வகித்தான் என்றும், கொலைக்குப்பிறகு கோல்வால்கருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் ஏராளமான தொல்லைகள் வந்து கொண்டிருந்ததினால் அவன் ஆர்.எஸ்.எஸ்.யை விட்டு விலகிவிட்டதாக கூறினானே தவிர அவன் உண்மை தொண்டனாக இருந்தான் என்று கோட்சியின் சகோதரன் கோபால் கோட்சே கூறியுள்ளார். கோட்சே ஆர்.எஸ்.எஸ்.ன் உருவாக்கம் என்பதால்தான் அவனுக்கு சிலைகளை அமைத்து விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்.க்கு தடைக்கு பின் கலவரங்கள்

இந்து மகாசபை தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பட்டேல் எழுதிய கடிதத்தில் “இந்து மகா சபையின் தீவிர வகுப்புவாதத்தை போல ஆர்.எஸ்.எஸ்.ன் வகுப்புவாதம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுதலாக உள்ளது. அரை இராணுவ முறையில் இரகசியமாகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபையை விட ஆபத்தானது” என்று கூறினார். காந்தி படுகொலையை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. 1948 பிப்ரவரி 3 அன்று கோல்வால்கர் கைது செய்யப்பட்டார், பிப்ரவரி 4ல் ஆர்.எஸ்.எஸ். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பிறகு சங்பரிவார்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவைப்பு, வழிப்பறி, கொள்ளை, கொலைகளில் ஈடுபட்டனர். கள்ளத்தனமான ஆயுதங்களையும், வெடி மருந்துகளையும் திரட்டியது தெரியவந்தது. மேலும் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறும், காவல்துறை மற்றும் இராணுவத்தை கையூட்டின் மூலம் வசப்படுத்துமாறும் மக்களை தூண்டிவிடும் பிரசுரங்களை வெளியிட்டனர். இவர்களின் வன்முறையை அரசு கட்டுப்படுத்தியது. தடையை நீக்க வேண்டும் என்று பலமுறை கோல்வால்கர் நேருவுக்கும், பட்டேலுக்கும் கடிதம் எழுதினார். பல்வேறு மகாணங்களின் அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அனைவரும் தடையை நீக்க வேண்டாம் என்றே பதிலளித்தனர். இறுதியாக 1949 ஜனவரி 14ல் தடை திரும்ப பெறப்பட்டது.

சில வாக்குறுதிகளையும், நிபந்தனைகளையும் விதித்தது அரசு . அதில் முக்கியமான நிபந்தனை ஆர்.எஸ்.எஸ். ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என்பது. ஆனால் இன்று வரை ஜனநாயகத்தை காலடியில் மிதித்து ஏறி நின்று கொண்டுதான் ஆட்சி செய்து வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த கோல்வால்கரிடம் “ஆர்.எஸ்.எஸ்.ல் எந்த மாற்றங்கள் கொண்டு வந்துள்ளீர்கள்? என்று கேட்கப்பட்டது “ஆர். எஸ். எஸ். எதனையும் கைவிடவில்லை” என்றே பதில் வந்தது. ஆர். எஸ். எஸ். எப்போதுமே வன்முறையை கைவிடாது என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவே இந்த வார்த்தை அமைந்திருந்தது.

காந்தியை துளைத்த தோட்டாக்கள் இன்னும் மிச்சமிருக்கிறது. காந்தி கொலைக்கு பின்பு அவர்களின் வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த தேசத்தில் யாரெல்லாம் பார்ப்பனிய பாசிஸ சிந்தாந்தத்திற்கு எதிராக இருக்கிறார்களோ, குரல் எழுப்புகிறார்களோ, போராடுகிறார்களோ அவர்களுக்கு எதிராக அந்த தோட்டாக்கள் பயன்படுத்தப்படும். இவர்களின் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள், நாட்டு மக்களை அகதிகளாக்கும் சட்டங்கள், உரிமைகள் பறிப்பு, மக்கள் விரோத திட்டங்கள், இவற்றுக்கு எதிராகப் போராடும் மக்களும் மாணவர்களும் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். இதனை காக்க வேண்டிய நீதிபதிகளும், நீதிமன்றங்களும், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் இவர்களின் தோட்டாக்களை கண்டு அஞ்சி ஒதுங்கி இருக்கின்றனர். ஆனால் இந்த தேசத்தின் மீது நேசம் கொண்ட அக்கறையுள்ள எந்த அமைப்பும், மக்களும் இந்த பாசிஸ தோட்டாக்களை கண்டு பயப்படப்போவதில்லை. இவர்களின் தோட்டாக்கள் காந்தியின் உயிரை பறித்ததே தவிர அவரின் போராட்டத்தை பறிக்கவில்லை.

SOURCE: THE RSS (A.G. NOORANI)

Comments are closed.