கர்னல் புரோஹித்தை விடுவிக்கும் முயற்சிகளை சாடும் முன்னாள் SIT தலைவர்

0

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து கர்னல் புரோஹித்தை விடுவிக்க நடக்கும் முயற்சிகளை முன்னாள் SIT யின் தலைவர் விகாஸ் நரைன் ராய் கடுமையாக சாடியுள்ளார். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்களை கைது செய்ததற்காக இவர் மீது கடுமையாக விமர்சனங்கள் இந்துத்துவா ஆதரவாளர்களிடம் இருந்து வைக்கப்பட்டு வருகிறது. இவர் UPA அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் எனவும், தாவூத் இப்ராஹீமிடம் இருந்து ஊதியம் பெறுகிறார் என்றும் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர்.

இவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கர்னல் புரோஹித்தை கைது செய்வதற்கு தங்களிடம் உறுதியான ஆதாரங்கள் இருந்தது என்றும் அந்த ஆதாரங்கள் அனைத்தும் புரோஹித்தை கைது செய்வதற்கு முன்னர் ராணுவ தலைமை அதிகாரியிடம் IB யின் இயக்குனரால் சமர்பிக்கப்பட்டது என்றும் அதன் பின்னரே புரோஹித் கைது செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

புரோஹித்தை காப்பாற்ற ஆதாரங்களை அழித்து போலிகளை தயார் செய்ய அதிகார சக்திகள் முயற்சிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார். மேலும் தற்பொழுது SIT மற்றும் ATS கூறுவது போல புரோஹித் எந்த ஒரு ராணுவ உளவுபிரிவிலும் இல்லை என்றும் அப்படி இருந்திருந்தால் ராணுவம் தங்களுடைய அதிகாரி ஒருவரை அவ்வளவு எளிதில் விட்டு கொடுத்துவிடுமா என்றும் ராய் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பகுத்தறிவிற்கு ஒவ்வாவதவை என்றும் தான் அரசின் ஓய்வூதியத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் அரசிடம் இருந்து எந்த ஒரு சலுகையையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள வலது சாரி இந்து அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக பாகிஸ்தானுக்கு இந்தியாவை குறை காண ஒரு வாய்ப்பு ஏற்படுத்தியதாக தங்கள் மேல் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கு, தங்களின் விசுவாசம் இந்த நாட்டிற்கும் இந்த நாட்டின் அரசியலமைப்பிற்கும் தான் என்றும் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் மறுக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார். முன்பு இருந்த UPA அரசும் கூட நாட்டில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு பின்னால் பாகிஸ்தானின் கைகள் இருப்பதாகவே முதலில் கருதி வந்தது என்று அவர் கூறியுள்ளார்.

தங்கள் விசாரணையில் கைப்பற்றப்பட்ட சூட்கேஸ் மூலமாகத்தான் இந்த குண்டுவெடிப்புக்கு பின்னால் வலது சாரி இந்துத்துவ அமைப்புக்கள் இருப்பது தெரிய வந்தது எனவும் மாலேகான் குண்டு வெடிப்புக்கு பின்னர் கர்கரே நடத்திய விசாரணையில் இது உறுதியாகிவிட்டது என்று கூறியுள்ளார்.

Comments are closed.