கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து 705.81 கோடி நன்கொடை வாங்கிய பாஜக:150 கோடி பாண் கார்ட் இல்லாமல் பெறப்பட்டுள்ளது

0

இந்திய தேசிய அரசியல் கட்சிகளுக்கு கார்பரேட் நிறுவனங்கள் சுமார் 956.77 கோடிகள் அளவிலான பணத்தை 2012-13 முதல் 2015-16 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நன்கொடையாக கொடுத்துள்ளன. மொத்தம் 2987 நிறுவனங்களிடம் இருந்து 705.81 கோடி ரூபாய்களை பாஜக பெற்றுள்ளதாகவும் இதில் 150 கோடிகளுக்கு மேலான தொகையை பாண் கார்ட் தகவல்கள் இல்லாமல் பாஜக பெற்றுள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜக பெற்ற மொத்த நன்கொடைகளின் மதிப்பு இதர கட்சிகள் பெற்ற கூட்டுத்தொகையில் மூன்று மடங்காகும்.

இதேபோன்று காங்கிரஸ் கட்சிக்கு 167 நிறுவனங்களிடம் இருந்து சுமார் 198.16 கோடிகள் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்த தகவல்களை Association for Democratic Reforms (ADR)  அமைப்பு தேர்தல் ஆணையத்தில் இந்த கட்சிகள் சமர்பித்த தகவல்களை கணக்கில் எடுத்து தெரிவித்துள்ளது.

மேலும் கார்பரேட்களிடம் இருந்து நன்கொடை பெற்ற காட்சிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சுமார் 50.73 கோடிகளும், CPM கட்சி சுமார் 1.89 கோடிகளும், CPI கட்சி 18 லட்சங்களும் பெற்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட கட்சிகளில் 20000 ரூபாய்க்கு மேல் 2012-13 முதல் 2015-16 வரை எந்த நன்கொடையும் பெறவில்லை என்ற பஹுஜன் சமாஜ் கட்சி உட்பட்டுத்தப்படவில்லை.

‘2012-13 முதல் 2015-16 வரையிலான காலகட்டத்தில் ஐந்து தேசிய கட்சிகள் மொத்தமாக 1070.68 கோடி ரூபாயை 20000 ரூபாய்க்கு அதிகமான நன்கொடை வகையில் பெற்றுள்ளது. இதில் 89% ஆன 956.77 கோடி கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டவையாகும்.

இதற்கு முந்தைய காலகட்டமான 2004-05  முதல் 2011-12 வரையில் வர்த்தக நிறுவனங்கள் சுமார் 378.89 கோடி ரூபாயை தேசிய கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளன.

சுரங்கம், ரியல் எஸ்டேட், மின்னுற்பத்தி, செய்தி நிறுவனங்கள் மற்றும் இன்ன பிற நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு 432.65 கோடி ரூபாயை 2012-13 முதல் 2015-16 வரையிலான காலகட்டத்தில் நன்கொடையாக வழங்கியுள்ளன. இதில் 287.69 கோடிகளை பாஜக வும் 129.16 கோடிகளை காங்கிரஸ் கட்சியும் 15.78 கொடிகளை தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பெற்றுள்ளது. இதில் பாஜக பெற்ற 287.69 கோடிகளில் ரியல் எஸ்டேட் துறையினரிடம் இருந்து 105.20 கொடிகளும், சுரங்கம், கட்டுமானத்துறை, ஏற்றுமதி/இறக்குமதி துறையினரிடம் இருந்து 83.56 கோடிகளும் இரசாயன மற்றும் மருந்து நிறுவனங்களிடம் இருந்து 31.94 கோடிகளும் பாஜக பெற்றுள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு வருடமும் ரூபாய் 20,000க்கு அதிகாமாக நன்கொடை வழங்கும் நபர்களின் பெயர், முகவரி, பாண் கார்ட் எண், நன்கொடை எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.