காலால் உதைத்தவரை எப்படி மன்னிக்க முடியும்?

0

பெர்லின்: “பிறந்த நாட்டில் இருந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடி வந்த எங்களை காலால் உதைத்து கீழே தள்ளிய அந்த பெண் ஒளிப்பதிவாளரை எவ்வாறு மன்னிக்க முடியும்? அந்த சம்பவத்தால் பயந்துபோன எனது மகன் அதிலிருந்து இதுவரை விடுபடவில்லை. எந்த மனிதருக்கும் செய்யக் கூடாத கொடுமையை அவர் செய்தார்”.  ஜெர்மனியில் தனது குடும்பத்தினருக்கு புகலிடம் அளித்த நண்பரின் வீட்டில் தங்கியுள்ள சிரியா நாட்டவரான அப்துல் முஹ்ஸின் அல் கதாப் டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


“சிரியாவின் தேர் எஸ்ஸூரைச் சார்ந்த நாங்கள் துருக்கியில் இருந்து 12 தினங்கள் பயணித்து ஹங்கேரி நாட்டு எல்லையை அடைந்தோம். ஆயிரத்திற்கும் அதிகமான அகதிகள் குழுவினர் மீது ஹங்கேரி போலீஸ் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடும்போது அந்த ஒளிப்பதிவாளர் என்னையும், எனது பிள்ளைகளையும் காலால் உதைத்து கீழே விழச் செய்தார். நான் அவரை போலீஸ் என்று கருதினேன். தலை சுற்றியது. இருந்தபோதிலும் எழுந்து ஓடினோம். பத்து கிலோமீட்டர்கள் நடந்து சென்று அகதிகளுடன் ரயில் ஏறி ஜெர்மனிக்கு தப்பினோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

அப்துல் முஹ்ஸினுக்கு மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். உடற்பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நிலையம் நடத்தும் அப்துல் முஹ்ஸின் ஒரு கால்பந்தாட்ட க்ளப்பின் பயிற்சியாளர். இவரது மூத்த மகன் ஏற்கெனவே ஜெர்மனிக்கு வந்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று முஹ்ஸின் அங்கு சென்றுள்ளார். மனைவியும், இரண்டு பிள்ளைகளும் தற்போது துருக்கியில் உள்ளனர். அவர்களையும் ஜெர்மனிக்கு அழைத்து வந்து ஏதேனும் வேலைத்தேடி குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்று கூறுகிறார் அவர்.

Comments are closed.