காலித் முஜாஹித் கஸ்டடி மரணம்:உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0

ஹுஜி போராளி என குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட நிரபராதியான முஸ்லிம் இளைஞர் காலித் முஜாஹித் போலீஸ் காவலில் வைத்து மரணமடைந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச முன்னாள் டி.ஜி.பி உள்பட மூத்த போலீஸ் அதிகாரிகள், ஐ.பி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை உத்தரவிட்டுள்ளது.
2013 மே 18-ஆம் தேதி மர்மமான நிலையில் போலீஸ் காவலில் வைத்து காலித் முஜாஹித் மரணமடைந்தார். அவரது தாய்மாமா ஸாஹிர் ஆலம் ஃபலாஹி அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் டி.ஜி.பி விக்ரம் சிங், முன்னாள் ஏ.டி.ஜி.பி. ப்ரிஜ் லால், முன்னாள் ஏ.எஸ்.பி மனோஜ்குமார் ஜா, சிறப்பு அதிரடிப்படை துணை எஸ்.பி சிரஞ்சீவ் நாத் உள்பட 37 போலீஸ் அதிகாரிகள், ஐ.பி அதிகாரிகள் மீது பாராபங்கி போலீஸ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

ஆனால், விசாரணையை முடித்துக் கொண்டதாக பாராபங்கி போலீஸ் இரண்டு தடவை கீழமை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. முதல் தடவை போலீஸ் அறிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனால், மீண்டும் விசாரணையை முடித்து விட்டதாக போலீஸ் அறிக்கை தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து சி.பி.ஐ விசாரணை கோரி காலிதின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தை அணுகினார். அப்பொழுது உ.பி அரசின் சி.பி.ஐ விசாரணைக்கான கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற லக்னோ கிளை சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டால் காலித் முஜாஹித் கஸ்டடி மரணம் குறித்த உண்மை சம்பவம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.