கால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்

2

செல்டிக் கால்பந்து ரசிகர்கள், செல்டிக் அணி மற்றும் இஸ்ரேல் அணியுடனான கால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடிகளை அசைத்து ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து செல்டிக் அணியினருக்கு 19,700 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது,

இந்த அபராதத்தை செலுத்த செல்டிக் கால்பந்து ரசிகர்கள் நிதி திரட்டினர். அபராதமாக 19,700 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டிய நிலையில் இவர்களுக்கு 144,000 அமெரிக்க டாலர்கள் நிதி சேர்ந்துள்ளது. ஆகையால் அபராதம் போக இதர நிதியை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட ஃபலஸ்தீனியர்களின் மருத்துவ உதவிக்காகவும் பெத்லஹெம் ஐடா அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்காகவும் செலவிடப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

கால்பந்து போட்டியின் போது ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக கொடி அசைத்த செல்டிக் ரசிகர்களின் இந்த செயல் அவர்களுக்கு அபராதத்தை பெற்றுத்தந்தாலும் உலகம் முழுவதில் இருந்தும் அவர்களுக்கு நன்மதிப்பை பெற்றுத்தந்துள்ளது. கிரவுட் ஃபண்டிங் முறையில் பெறப்பட்ட இந்த நிதியில் ஒரு பங்கு ஐடா அகதிகள் முகாமில் வசிக்கும் ஃபலஸ்தீன குழந்தைகளுக்கு கால்பந்து உபகரணங்கள் வாங்க செலவிடப்படும் என்றும் அந்த குழந்தைகளின் அணி ஐடா செல்டிக் அணி என்று அழைக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக செயல்பட்டதினால் செல்டிக் அணி மீது UEFA அபராதம் விதிப்பது இது ஒன்பதாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலுக்கு எதிரான போட்டியில் செல்டிக் அணி 5-2 என்ற கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது.

Discussion2 Comments