காவலில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம்

0

காவலில் இறந்த ஜெயமூர்த்தி குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி ரூ. 4,12,500 நிவாரணம்!

கடலூர் மாவட்டம், கரிக்கன் நகரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்ற தலித் இளைஞர் பாகூர் காவல்நிலையப் போலீசார் மற்றும் காலாப்பட்டு மத்திய சிறைத்துறையினர் அடித்துத் துன்புறுத்தினர். இதனால் சிறையில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட அவர் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சென்ற 27.11.2018 அன்று நீதிமன்றக் காவலில் (Judicial Custody) மரணமடைந்தார்.

இதுகுறித்து நீதித்துறை நடுவர் எண். 4 சரண்யா அவர்கள் விசாரித்து அரசுக்கு அறிக்கைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பாகூர் காவல்நிலைய எஸ்.ஐ. ஜெயகுருநாதன், உதவி எஸ்.ஐ. திருமால், சிறைக் கண்கணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் வெங்கட ரமண நாயக் ஆகியோர் மீது சிஐடி போலீசார் வழக்குத் தொடர்ந்தனர்.

இறந்துப் போன ஜெயமூர்த்தி தலித் என்பதாலும், குற்றமிழைத்தவர்கள் தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் சேர்க்க வேண்டுமென காவலர் புகார் ஆணையத்தில் (Police Complaints Authority) ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்மீது விசாரணை மேற்கொண்ட ஆணையத்தின் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதியுமான இராஜசூர்யா அவர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளைச் சேர்க்க வேண்டுமென உத்தரவுப் பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆணையத்தின் உத்தரவை ஏற்று இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. வழக்குப் புலன்விசாரணை பி.சி.ஆர். பிரிவு எஸ்.பி.க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சென்ற 08.05.2019 அன்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி நிவாரணம் வழங்க வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. தலித் ஒருவர் தலித் அல்லாதவர்களால் கொலை செய்யப்பட்டாலோ, இறந்துப் போனாலோ மொத்தம் ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் 50% தொகை உடற்கூறாய்வு முடிந்தவுடனும், மீதி 50% தொகை குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய பின்னரும் வழங்க வேண்டும்.

இதன்படி இன்று (29.05.2019) காலையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 4,12,500/- தொகைக்கான காசோலையை வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.சிவா, ஜெயமூர்த்தி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இரகுநாதன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments are closed.