காவலில் தலித் இளைஞர் மரணம்: உதவி ஆய்வாளர், சிறை அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு!

0

காவலில் தலித் இளைஞர் மரணம்: உதவி ஆய்வாளர், சிறை அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு!

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகேயுள்ள கரிக்கன் நகர், புதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெயமூர்த்தி (வயது 23) கடந்த 23.11.2018 அன்று பாகூர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் திருட்டு வழக்கு குற்றம் தொடர்பாக அவரை காவல்துறையினர் விசாரத்ததாக தெரியவந்துள்ளது. விசாரணையின் போது ஜெயமூர்த்தியை காவல்துறையினர் கடுமையாக தாக்கி சித்தரவதை செய்துள்ளனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து சிறையில் உடல்நலம் குன்றிய அவர் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 27.11.2018அன்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பாகூர் காவல் நிலையத்திலும், காலாப்பட்டு சிறையிலும் அடித்துத் துன்புறுத்தியதால்தான் அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி கவுசல்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஜெயமூர்த்தியை போலீசார் பிடித்துச் சென்றபின் பாகூர் காவல் நிலையத்திற்குச் சென்று அவரைப் பார்த்த போது தலைக் கவிழ்ந்தபடி நிற்க முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக அவரது மனைவி கவுசல்யா கூறியுள்ளார். இது ஜெயமூர்த்தி போலீசார் அடித்துத் துன்புறுத்தியதால்தான் இறந்தார் என்பதை உறுதி செய்கிறது.

மேலும், நீதிமன்றத்திற்கு ரிமாண்டிற்கு அழைத்து வரப்பட்ட சிறைவாசிகள் ஜெயமூர்த்தியை போலீசாரும், சிறைத்துறையினரும் அடித்துத் துன்புறுத்தியதால் இறந்துப் போனார் எனப் புகார் கூறியுள்ளனர். ஜெயமூர்த்தியை சிறையில் அடைக்கப் போலீசார் கொண்டு வந்தபோது சிறைத்துறையினர் அவருக்கு வெளி மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம்.

போலீசார் ரிமாண்டிற்கு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தும் போது பல சந்தர்ப்பங்களில் நீதிபதிகள் கைதிகளைப் பார்க்காமலேயே ரிமாண்டு செய்கின்றனர். கைதிகளிடம் போலீசார் துன்புறுத்தினார்களா என்று கேட்டுப் பதிவு செய்து, தேவைப்பட்டால் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். இதுபோன்று நடவடிக்கை எடுக்காததால்தான் கைதிகள் உரிழப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, புதுச்சேரி அரசு ஜெயமூர்த்தியின் உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர், சிறைத்துறையினர் அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைவரையும் உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதுகுறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிட கோரியும், குற்றமிழைத்த காவல் அதிகாரிகள், சிறை அதிகாரிகள் மீது இ.த.ச. 302 பிரிவின்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யவென்றும்மென்றும் உயிரிழந்த இளைஞர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2015-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் பின்னர் நீதித்துறை நடுவர் – எண் 4 சரண்யா தலைமையில் விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் உடல் கூறாய்வு மருத்துவர் குழு மூலம் நடந்தது. அனைத்தும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே வழக்கு விசாரணை சி.ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கையை சென்ற மாதம் அரசுக்கு அளித்தார். அதில் பாகூர் காவல்நிலைய போலீசார், சிறைத்துறையினர் அடித்துத் துன்புறுத்தியதால்தான் ஜெயமூர்த்தி இறந்தார் எனக் கூறியுள்ளார். ஜிப்மர் மருத்துவமனை அளித்த உடல்கூறாய்வு அறிக்கையில் ஜெயமூர்த்தி உடலில் 30 இடங்களில் காயம் இருந்தது எனக் கூறப்படுள்ளது.

இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) சுந்தர் நந்தா உத்தரவின் பேரில் பாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி. போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed.