காவிமயமாகிறதா நீதித்துறை?

0

சங்பரிவாரங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான இட ஒதுக்கீடை ரத்து செய்வதும், பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதும் தற்பொழுது நீதித்துறை வாயிலாக நடை பெறுகிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
கடந்த செவ்வாய் கிழமை உயர்கல்வி கூடங்களில் இட ஒதுக்கீட்டினை ரத்து செய்ய வேண்டும் என்று மோடி அரசாங்கத்திற்கு உச்ச நீதி மன்றம் வலியுறுத்தியுள்ளது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பி சி பான்ட் அடங்கிய பெஞ்ச் “68 வருடங்களாக சில சலுகைகள் மாற்றப்படாமலேயே உள்ளன” என்று கூறியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த பரிந்துரையை சற்றும் தாமதிக்காமல் பரிசீலனை செய்யும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளது. ஆனால் நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் சாதி மற்றும் சமூகம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் மிகப்பெரும் சவாலாக உள்ளன என்பதை இவர்கள் தங்களின் கருத்தில் கொள்ளவில்லை.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீடு முறை பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆர்.எஸ்.எஸ். இன் கொள்கைகள் இப்படி மறைமுகமாக நடைமுறைக்கு கொண்டுவரும் வேலைகள் துரிதமாக நடத்தப்பட்டும் வரும் வேளையில் பா.ஜ.க எப்பவும் போல மக்களை ஏமாற்றும் வேலைகளை செவ்வனே செய்து வருகிறது. பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி மக்களிடம் பேசுகையில் உங்கள் இடஒதுக்கீட்டை யாரும் தட்டி பறித்திட விட மாட்டோம் என்று கூறினார். இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்டுத்துவதை எதிர்த்து மறைமுகமாக கூறப்பட்ட கருத்து அது என்று அனைவரும் அறிவர். ஆனால் இது தலித்களையும் ஏமாற்றும் வேலை என்று உச்ச நீதி மன்றத்தின் இந்த பரிந்துரை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

இதே போல அதே செவ்வாய் கிழமை மற்றொரு நிகழ்வில் சிறப்பு பெஞ்ச் ஒன்று அமைத்து இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதிகளவிலான இஸ்லாமிய பெண்கள் வாய் வழி விவாகரத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இஸ்லாமிய சட்டங்களை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் பாரதிய முஸ்லிம் மகிலா அந்தோலன் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
தங்களின் உதிரி அமைப்புகளின் மூலமாகவும் அதிகாரத்தில் உள்ள தங்களின் உறுப்பினர்களின் வாயிலாகவும் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான அனைத்து சலுகைகளையும் பறிக்கும் நடவடிக்கைளை துரிதாமாக ஆர்.எஸ்.எஸ் செய்து வருவதை உணர முடிகிறது.

நீதியை நிலைநாட்டுவதற்காக மக்கள் நாடிச் செல்லும் கடைசி புகலிடமாக நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால் அதே நீதிமன்றங்கள் காவிகளின் கூடாரமாக மாறினால் மக்கள் தங்கள் நீதியை எங்கே சென்று பெறுவார்கள் என்ற கேள்விதான் தற்போது அனைவரின் முன் வந்து நிற்கிறது.

Comments are closed.