காஸாவில் கால்பந்து போட்டி: இஸ்ரேலின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி?

0

– ரிழா

விளையாட்டுப் போட்டி என்றாலே கொண்டாட்டம் தான்… கால்பந்து போட்டி என்றால் சொல்லவே வேண்டாம்…

அதுவும் திறந்த சிறையில் வாழும் மக்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்பதும், உற்சாகமாக கண்டு களிப்பதுமென்றால் எவ்வளவு ஆனந்தம்…ஃபலஸ்தீன மக்களுக்கு இந்த மகிழ்ச்சி 15 ஆண்டு கால நீண்ட போராட்டத்திற்கு பின்பு கிடைத்துள்ளது.

கால்பந்து விளையாட்டின் தாயகமான ஐரோப்பாவில், தினம்தோறும் ஏதாவதொரு நகரில் கிளப் போட்டிகள் நடைபெற்று கொண்டே இருக்கும்…

அங்கு ஆடம்பரமான வாழ்க்கையின் கொண்டாட்டங்களுக்கு இடையில், மேலும் சுவை கூட்டும் பொழுதுபோக்குகளில் ஒன்றாக கால்பந்து விளையாட்டு உள்ளது.

கோடி கோடியாய் பணம் கொழிக்கும் விளையாட்டும் அதுதான்…

ஆனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் தினம் தினம் மரணத்தின் வாயிலுக்கு சென்று வரும் ஃபலஸ்தீன இளைஞர்களுக்கோ, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான ஒரே வாய்ப்பே இந்த கால்பந்து விளையாட்டு…

ஃபலஸ்தீன உடலை மேற்கு கரை என்றும், காஸா என்றும் கூறுபோட்டு ரத்த பந்தங்களை பிரித்து குரூர இன்பம் அடைந்து வருகிறது இஸ்ரேல்…

ஐநா உள்ளிட்ட எந்த மனித உரிமை அமைப்புகளுக்கும் கட்டுப்படாத அராஜக கும்பலான இஸ்ரேல், ஃபலஸ்தீன மக்கள் தங்களின் சுய விருப்பம் எதனையும் சிறு அளவிலேனும் நிறைவேற்றி விடக் கூடாது என்பதில் குறியாக உள்ளது.

ஐநா அமைப்பையும் விட அதிக உறுப்பு நாடுகளை கொண்ட அமைப்பு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) ஆகும்.

கால்பந்து விளையாட்டில் இன, மொழி, நிற, பால்பாகுபாடு துளியும் எழுந்து விடக் கூடாது என FIFA உறுதியாக உள்ளது.

ஆனால் அந்த சம்மேளனத்தையே கேலிப் பொருளாக கருதி, ஃபலஸ்தீன கால்பந்து வீரர்களையும் பயிற்சியாளர்களையும் காஸாவிலிருந்து மேற்கு கரைக்கும், மேற்கு கரையிலிருந்து காஸாவுக்கும் செல்ல இஸ்ரேல் அனுமதி மறுத்து வந்தது.

இஸ்ரேலின் இந்த இனவெறியை, அந்நாட்டு கால்பந்து சங்கம் எதிர்க்காதது
மட்டுமல்ல, கால்பந்து சம்மேளன விதிகளுக்கு முரணாகவும் செயல்பட்டு வந்தது.

மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மையமாக வைத்து ஐந்து கால்பந்து கிளப்களை உருவாக்கி சர்வதேச போட்டிகளிலும் அந்த கிளப்களை பங்கேற்கச் செய்துள்ளது.

எந்த ஒரு விளையாட்டு சங்கத்தின் உள்விவகாரங்களிலும், தேர்தலிலும் அந்தந்த நாட்டு அரசு தலையிடுமானால் அந்த விளையாட்டு சங்கத்தை தடை செய்ய விளையாட்டு அமைப்புகளில் விதிகள் உள்ளன.

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் அரசு தலையிட்டதால், இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தடை செய்தது நினைவுகூரதக்கது.

இஸ்ரேல் கால்பந்து சங்கத்தில் அந்நாட்டின் இன பாகுபாட்டுக் கொள்கை பிரதிபலிப்பதை சுட்டிக் காட்டிய, ஃபலஸ்தீன கால்பந்து சங்கம், இஸ்ரேல் கால்பந்து சங்கத்தின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என FIFA-விடம் கோரிக்கை வைத்தது.

இந்தப் பின்னணியில் தான் ஃபலஸ்தீனத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியை நடத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

15 ஆண்டுகளுக்கு பின் ஃபலஸ்தீன கிளப் அணிகள் மோதும் கால்பந்து போட்டியைக் காண, காஸாவின் யர்முக் மைதானத்தில் 2000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.

இந்த மைதானத்தின் ஒரு பகுதியும் சென்ற வருடம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்தது. அதனை புதுப்பித்து ரசிகர்கள் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காஸாவின் ஷிஜையா யுனைடெட் அணி வீரர்கள், மேற்கு கரையின் ஹெப்ரான் நகர அணியான அல் அஹ்லி அணி வீரர்களை எதிர் கொண்டனர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் LEG ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பான முறையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. சென்ற வருடம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று ஷிஜையா என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு காஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதலால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டும், லட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்தும் மீளாத் துயரில் இருக்கும் போது, இந்தப் போட்டி அவர்களின் வாழ்வில் கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

60 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு நாட்டை பிரித்துப் போட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது இஸ்ரேல்.

காஸா பகுதியை ஹமாஸ் அமைப்பும், மேற்குகரைப் பகுதியை அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அங்கம் வகிக்கும் ஃபத்தாஹ் கட்சியும் நிர்வகித்து வருகின்றன.

ஹமாஸ், ஃபத்தாஹ் நிர்வாகங்களுக்கு இடையே அண்மையில் கருத்தொற்றுமை ஏற்பட்டது என்றாலும், அது பெரிய அளவில் பயன் தரவில்லை.

ஒற்றுமைப் பயணத்தில் நம்பிக்கை இல்லாத அரசியல்வாதிகள் தோற்ற இடத்தில், இந்த விளையாட்டுப் போட்டி வெற்றியை கொண்டு வந்துள்ளதாக அல் அஹ்லி அணியின் கோல் கீப்பர் அஸ்மி சுட்டிக் காட்டினார்.

இரு அணிகளுக்கு இடையிலான போட்டி என்பதையும் தாண்டி, உலகின் வல்லாதிக்கமிக்க சக்தியை எதிர்த்து, ரத்த உறவுகள் சங்கமித்துக் கொள்ளும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக இது அமைந்தது.

மரணத்தின் சறுகுகளிலிருந்து துளிர் விட்டு விருட்சமாய் ஓங்கி வளரும் ஹமாஸின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஷிஜையா அணி வீரர்கள் பந்தை லாவகமாக கடத்தி, எதிரணியின் கோல் எல்லைக்குள் கொண்டு செல்லும் போது, ” மரணத்தை கண்டு பயப்படாதே” என்ற ரசிகர்களின் ஆரவாரக் கூச்சல், இது வெறும் கால்பந்துப் போட்டியல்ல, அதற்கும் மேல் என அடக்குமுறையாளர்களின் செவிப்பறையில் ஓங்கி அறைந்தது.

காஸாவிற்கு வந்தது மகிழ்ச்சி தான் என்றாலும், போர் அழிவுகளை பார்க்கும் போது மனது கனக்கிறது என கண் கலங்கினார் அல் அஹ்லி அணி கேப்டன் ஃபதி.

ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தாலும், இது “எங்களுக்கு மகிழ்ச்சி தினம்” என ரசிகர்கள் கொண்டாடினர்.

பாலஸ்தீனர்களின் இந்த மகிழ்ச்சியை பொறுத்துக் கொள்வார்களா இஸ்ரேலியர்கள்?!…

ஷிஜையா யுனைடெட், அல் அஹ்லி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது LEG ஆட்டம், மேற்கு கரையின் ஹெப்ரான் நகரில் நடைபெற வேண்டும். (LEG என்பது Home ground, Away Ground போட்டியை குறிப்பிட கால்பந்து போட்டிகளில் பயன்படுத்தும் சொல். இதற்கும் League – க்கும் வித்தியாசம் உள்ளது).

ஆனால் காஸா அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை மேற்கு கரைக்கு செல்ல அனுமதி மறுத்து, மீண்டும் தங்களின் சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

Comments are closed.