காஸா குழந்தையின் கனவு

0

– யாரா ஜூதா

காஸாவின் பதினைந்து வயது சிறுமி நான். நான் சிறிய வயதுடையவளாக இருக்கலாம். ஆனால், வாழ்வை ரசிப்பதற்கு போதிய அவகாசம் இல்லாமல் படுகொலை செய்யப்பட்ட ஃபலஸ்தீன குழந்தைகள் குறித்து எழுதுவதற்கு போதிய பக்குவம் எனக்கிருக்கிறது.
இந்த குழந்தைகள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ விரும்பினார்கள். ஆனால் இந்த இலக்கை அவர்களால் அடைய முடியவில்லை. அவர்களின் கனவுகளையும் உங்களிடம் சொல்ல நான் விரும்புகிறேன். இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் செய்ய பெரும்பான்மை காஸா குழந்தைகள் விரும்பினார்கள். எங்களின் நிலங்களை திருடி எங்களின் பிரியமானவர்களை கொலை செய்தவர்களை எதிர்த்து போராட இந்த குழந்தைகள் விரும்பினார்கள். அவர்கள் எங்கள் வீடுகளை இடித்தார்கள், எங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் கொலை செய்தார்கள், எங்களை அகதிகள் ஆக்கினார்கள். எனக்கு ஒரு வித்தியாசமான கனவும் இருக்கிறது.
நான் உலகை சுற்றி வர விரும்புகிறேன். கொண்டாடுவதற்கோ ரசிப்பதற்கோ அல்ல இந்த பயணம். இந்த குழந்தைகளின் செய்திகளை கொண்டு சேர்ப்பதற்கே இந்த பயணம். எனதுள்ளத்தில் உள்ள குற்ற உணர்ச்சியை போக்க வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பது போல் இந்த குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என நான் நம்புகிறேன். வெடிகுண்டு சத்தங்களை போக்க வேண்டும், விளையாட்டு பொருட்களை வாங்க அவர்களுக்கு போதியளவு பணம் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த செய்தியை படிப்பவர்களுக்கு – முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் அனைவருக்கும் – ஏதேனும் செய்வதற்கும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கும் போதியளவு மனிதாபிமானம் இருக்கிறது என நான் நம்புகிறேன்.
எனது அண்டை வீட்டினர் மீது வானில் இருந்து குண்டுகள் விழுந்த போது நான் எப்படி உணர்ந்தேன்..ராக்கெட்கள் தாக்கிய எனது வீடு அதிர்ந்த போது நான் எப்படி பயந்தேன்..முடிவில்லாத அந்த இரவுகள் குறித்தும்..நான் தினந்தோறும் எப்படி தவித்தேன் என்பதை சொல்லவும் முன்னர் நான் ஊடகங்களுடன் சண்டை போட்டுள்ளேன். என்னை போன்ற குழந்தைகள் கனவுகளை காண்பதற்கு இரவில் நிம்மதியாக உறங்க முடியாது என்பதையும் ஒவ்வொரு முறை தூங்கும் போதும் திடுக்கிட்டு விழித்ததையும் அவர்களிடம் சொல்ல விரும்பினேன். ஃபலஸ்தீனியர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப சரியான தருணம் இது என்று நான் நினைக்கிறேன்.
நான் உள்ளிட்ட காஸாவின் குழந்தைகள் வெளிப்பார்வைக்கு நல்ல நிலையில் இருப்பது போல் தெரியலாம். ஆனால் இஸ்ரேலின் தொடர் குண்டுகள் ஏற்படுத்தும் பீதியால் நாங்கள் உள்ளுக்குள் நன்றாக இருப்பதில்லை. ஆனால், எங்களின் உரிமைகளுக்காக போராடும் எங்களை தீவிரவாதிகள் என்கின்றனர். சியோனிசவாதிகளின் கொலை செய்யும் முறைகள் குறித்து ஃபலஸ்தீன வரலாற்று புத்தகங்களில் நான் வாசித்த ஒவ்வொரு பக்கமும் என் நினைவில் உள்ளது. ஒவ்வொரு முறை நான் விழிக்கும் போதும் நான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிறேன்..ஏனென்றால் நான் உயிருடன் உள்ளேன். ஃபலஸ்தீனில், குறிப்பாக காஸாவில், நாங்கள் எதை சந்திக்கிறோம் என்பதை உலகிற்கு அறியச் செய்ய எனது குரலை உயர்த்துவேன் என்று எனக்கு நானே உறுதி கொள்கிறேன்.
இறுதியாக, என்னை குறித்த உணர்ச்சிமிக்க ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு அப்போது வயது 7. இஸ்ரேலை எதிர்த்து சண்டையிட்டு, இஸ்ரேலிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டு, சுவனத்தை அடைந்து அங்கு நிரந்தரமாக சந்தோஷமாக வாழ வேண்டும் என விரும்பினேன். எனது கனவுதான் காஸாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் கனவு.
எனது செய்தி உங்கள் உள்ளங்களை அடைந்து எங்களின் நிலைகளை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். காஸாவின் குழந்தைகள் இதைவிட சிறந்ததொரு வாழ்க்கையை வாழ்ந்து எதிர்காலத்தில் உங்களிடம் அதை கூறுவார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
(காஸாவின் அல்நுஸைரத் அகதிகள் முகாமில் யாரா ஜூதா வாழ்ந்து வருகிறாள்)

நன்றி: palestinechronicle.com
தமிழில்: ரியாஸ்

Comments are closed.