காஸா சுரங்கத்தில் வெள்ளம் ஏற்படுத்திய எகிப்து: 4 பேர் பலி

0

ஃபலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் பல கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் வித்திருக்கும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் ஜீவநதியாக சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. மக்களுக்கு தேவையான உணவு மருந்துகளை கூட இஸ்ரேல் ஃபலஸ்தீனிற்குள் அனுமதிக்காத நிலையில் இவை அனைத்தும் இந்த சுரங்கங்கள் மூலமாகவே பலஸ்தீனிற்குள் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில் எகிப்தில் இருந்து ஃபலஸ்தீனிற்கு செல்லும் சுரங்கங்களை எகிப்து இராணுவம் வேண்டுமென்றே கடல் நீரை செலுத்தி வெள்ளத்தை ஏற்படுத்தி அழித்துள்ளது. இதில் சேதமடைந்த சுரங்கத்தின் இடிபாடுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அலி பதாவி (43), முஹம்மத் பதாவி(21), இமாத் பதாவி(24), மற்றும் சமி அல் தவில்(30) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஃபலஸ்தீன பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. ஆனால் இதில் மூன்று பேரின் உடல்கள் மட்டும் தான் கண்டறியப்பட்டுள்ளது என்றும் நான்காவது நபரை காணவில்லை என்றும் சில இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வருடத்தின் தொடக்கத்தில் இருந்து பத்துக்கும் மேற்ப்பட்ட ஃபலஸ்தீனியர்கள் சுரங்க விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருவர் சுரங்கத்தில் தவறுதலாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எகிப்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மத் முர்ஸியின் ஆட்சி இராணுவ புரட்சியால் கவிழ்க்கப்படும்வரை இந்த சுரங்கங்கள் ஃபலஸ்தீனின் ஜீவநாடியாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.