காஸியாபாத் போலி என்கெளவுண்டர்: 4 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

0

காஸியாபாத் போலி என்கெளவுண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் ஒன்று காவல்நிலைய அதிகாரி உட்பட உத்தரபிரதேச காவலர்கள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு போஜ்பூரில் நான்கு கூலித் தொழிலாளிகளை காவல்துறை ஆய்வாளர், காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் சுட்டுகொன்றது நிரூபணம் ஆகியுள்ளது.

மேலும் இவர்கள் கொலை குற்றம் புரிந்ததும், ஆதாரங்களை அழித்ததும், போலியான ஆதாரங்களை வழங்கியது உறுதியாகியுள்ளது.

1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி தந்தேராஸ் பண்டிகையின் போது ஜலாலுதீன், ஜஸ்பிர், அசோக் மற்றும் பிரவேஷ் ஆகியோர் இந்த காவலர்களால் அநியாயமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் விஜய் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். ஏழை குடும்பத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகளான இவர்கள் பில்குவா கிராமத்திற்கு வேலை தேடி சென்றிருந்தனர். போஜ்பூர் காவல்நிலையம் எதிரே உள்ள டீ கடையில் அமர்ந்திருந்த இவர்கள் காவலர்களால் கடத்தப்பட்டு பின்னர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகளில் காவல்துறை கூறிய பொய்களை தடவியல் விசாரணை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

ஏறத்தாழ 20 வருடங்கள் நீண்ட இந்த விசாரணையின் முடிவில், சிபிஐ சிறப்பு நீதிபதி ராஜேஷ் சவுத்திரி, காவல்துறை ஆய்வாளர் லால் சிங், துணை ஆய்வாளர் ஜோகிந்தர் சிங், மற்றும் இரு காவலர்கள் கொலை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஐந்தாம் குற்றவாளியான ரன்பீர் சிங் இந்த வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் இவ்வழக்கை ஹாபூர் காவல்துறை விசாரித்து வந்தது. அவர்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் குற்றமற்றவர்கள் என்று கூறினர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள், தாங்கள் வேறொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுடன் தாங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்ததகாவும் அப்போது போஜ்பூரின் மச்சிலி பசார் என்று அழைக்கப்படும் இடத்தில் இவர்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என்றும், அதில் நான்கு பேரில் இருவர் காவல்துறையினரின் எதிர் தாக்குதலில் சுடப்பட்டனர் என்றும் மற்ற இரண்டு பேர் அருகில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் சென்றதினால் கூடுதல் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்த பிறகு நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர் என்று கூறியிருந்தனர்.

ஆனால் இந்த வழக்கை சிபிஐ 1997  ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் விசாரணைக்கு எடுத்தது. அதில் ஜஸ்பிர் மற்றும் ஜலாலுதீன் ஆகிய  இருவர் லால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளால் சாலையில் வைத்து கொல்லப்பட்டும் அசோக் மற்றும் பிரவேஷ் ஆகியோர் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து கூடுதல் காவல்துறையினர் வரும் முன்னரே கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த போலி மோதல் கொலையில், காவல்துறையினர் ரிவால்வர்கள், பிஸ்டல்கள், ரைஃபில்கள், ஸ்டன் துப்பாக்கிகள், கார்பைன் மற்றும் AK 47 ரக துப்பாக்கிகளை கொண்டு சுட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் எஸ்.சி.அகர்வால் தனது அறிக்கையில் ஜஸ்பிர் மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்ததாகவும் ஜலாலுதீன் மீது ஐந்து தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அசோக் மற்றும் பிரவேஷ் மீது இரண்டு மற்றும் ஐந்து தோட்டா காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஜஸ்பிர் மீது பாய்ந்த தோட்டா ஐ.பி.எஸ். அதிகாரி ஜோதி பேலூரின் அதிகாரப்பூர்வ ரிவால்வரில் இருந்து சுடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தின் போது ஜோதியிடம் தான் அந்த ஆயுதம் இருந்ததா இல்லையா என்று சரிவர தெரியவில்லை.

இவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் அவரையும் ஒரு குற்றம் சாட்டப்பட்டவராக 2007 செப்டெம்பர் மாதம் 9 ஆம் நாள் நீதிமன்றத்திற்கு சிபிஐ அழைத்திருந்தது.

ஆனால் இங்கிலாந்தில் வசித்து வரும் பேலூர் இந்த விசாரணைக்கு வரவில்லை. நீந்திமன்றத்தில் ஆஜராக கூறி அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு எதிரான அவரது மனுக்கள் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இப்படியிருக்க இந்த வழக்கு விசாரணை ஏழைகளான பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்ககளுக்கு மிகப்பெரிய கஷ்டமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு தொடர்ச்சியாக காவல்துறையினரிடம் இருந்து இந்த வழக்கை திரும்பப்பெற வற்புறுத்தல்களும் வந்தது.

இந்த போலி மோதலில் உயிரிழந்த அசோக்கின் சகோதரி புஷ்பா, “எங்கள் சகோதரர் என்கெளவுண்டரில் கொல்லப்பட்டதை அடுத்து எங்கள் தந்தை இந்த வழக்கை தெஹ்ராடுன்னில் நடத்தினார். அவர் மாரடைப்பால் 2008 ஆம் ஆண்டு உயிரிழந்ததும் எங்கள் வயதான தாய் அந்த வழக்கை நடத்தினார். நாங்கள் இந்த வழக்கை நடத்துவதற்காக எங்களது கால்நடைகளை விற்க வேண்டியிருந்தது. ஆனாலும் நாங்கள் விடுவதாக இல்லை. எங்களை காவல்துறையினர் சந்தித்து சமரசம் பேச முற்பட்டனர். நாங்கள் அதற்கு தயாராக இல்லை.” என்று கூறியுள்ளார்.

Comments are closed.