காஸ்கஞ் கலவரம் திட்டமிடப்பட்டது. உபி காவல்துறைக்கும் கலவரத்தில் பங்கு: உண்மை அறியும் குழு அறிக்கை

0

முஸ்லிம்களின் குடியரசு தின கொண்டாட்டங்களை சேதப்படுத்தி அவர்களின் சொத்துக்களையும் கலவரம் செய்து அழித்த இந்த்துத்வாவினரின் காஸ்கஞ் கலவரம் தற்செயலானது அல்ல என்றும் நன்றாக திட்டமிடப்பட்டது என்றும் இந்த கலவரத்தில் உத்திர பிரதேச மாநில காவல்துறைக்கும் பங்கு உள்ளது என்றும் உண்மை அறியும் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை “வெறுப்பிற்கு எதிரான ஒன்றுகூடல்” என்கிற பெயரில் வெளியிட்ட உண்மை அறியும் குழு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடமும் அன்று நடந்தவை பற்றி தகவல் சேகரித்தது. இதனடிப்படையில் காஸ்கஞ் கலவரம் தற்செயலானது அல்ல என்றும் முனந்தாகவே நன்றாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கலவரம் என்று அந்த குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அப்பகுதி மக்களின் கூற்றுப்படி காவல்துறை மற்றும் அப்பகுதி நிர்வாகம், பாகுபாடுடன் நடந்துகொண்டது என்றும்  தெரிவித்துள்ளனர். சங்கல்ப் நிறுவனம் மற்றும் ABVP யினர் வன்முறையில் ஈடுபட்டு முஸ்லிம்களின் கடைகளையும் பள்ளிவாசல் ஒன்றிற்கு சொந்தமான சொத்துக்களையும் குறிவைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த கலவரத்தில் காவல்துறை கலவரக்காரார்களை எதிர்த்தோ அல்லது சொத்துக்கள் சேதப்படுத்துவதில் இருந்து கலவரக்காரர்களை தடுத்து அதற்கு பாதுகாப்பு வழங்கவோ எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்று உண்மை அறியும் குழு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் சேதப்படுத்தப்பட்ட இடங்களுக்கு சென்று காவல்துறை பார்வையிடவோ அல்லது ஆதாரங்கள் சேகரிக்கவோ இல்லை என்று உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை தங்களது முதல் தகவல் அறிக்கையில் இரண்டு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது குறித்த தகவல்களை சேர்க்கவில்லை என்பதும் கலவரத்தை தொடர்ந்து முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை வித்தித்ததும் காவல்துறையின் பாகுபாடான நடவடிக்கைகளுக்கு சான்றுகள் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் சேதப்படுத்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதிலும் பெரும் சிக்கல் நிலவுகிறது என்றும் காவல்துறையின் இந்த பாகுபாடான நிலைப்பாடு பலர் தங்களது இழப்பு குறித்து புகார்கள் பதிவு செய்வதை விட்டும் அவர்களை தடுக்கிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Comments are closed.