கிரிமினல்களுக்கு தேர்தல் டிக்கெட் கொடுக்கும் பா.ஜ.க.

0

பீகார் மாநிலத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு பா.ஜ.க. கிரிமினல்களுக்கு வாய்ப்பளித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உள்துறை செயலாளருமான ஆர்.கே.சிங் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.பணத்தை கொடுத்தவர்களுக்கு தேர்தலில் நிற்பதற்கு டிக்கெட் கொடுத்து உண்மையாக கட்சிக்கு உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சராக தான் இருந்த போது யாருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் தற்போது பா.ஜ.க. டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால் அந்த கிரிமினல்கள் யார் என்பதை ஆர்.கே.சிங் தெரிவிக்கவில்லை.
ஆர்.கே.சிங்கின் கருத்துகளுக்கு அக்கட்சியினர் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினராக சத்ருஹன் சின்ஹா, ஆர்.கே.சிங்கின் கருத்துகளை வரவேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் லலித் மோடி விவகாரத்திலும் ஆர்.கே. சிங் எதிர் கருத்துகளை தெரிவித்தார். லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் சுஷ்மா சுவராஜையும் வசுந்தரா ராஜேயும் கட்சி பாதுகாத்த போது, குற்றவாளியான லலித் மோடிக்கு உதவுவது சட்டப்படியும் தார்மீக அடிப்படையிலும் தவறு என்று தெரிவித்தார்.
சிங்கின் கருத்துகளை பா.ஜ.க. மறுத்துள்ளது. ஆர்.கே. சிங் கட்சிக்கு புதியவர் என்றும் அவரின் கூற்றில் உண்மை இல்லை என்றும் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி ஆர்.கே.சிங்கின் கருத்துகளை வரவேற்றுள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் சமயம், ஆர்.கே.சிங் கூறியுள்ள கருத்துகள் பாரதிய ஜனதாவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.