குஜராத்தின் முன்னாள் தலைமை செயலர் அச்சல் குமார் ஜோட்டி தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம்

0

தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த நஜீப் ஜைதியின் பதிவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவரது பதவிக்கு தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குஜராத்தின் முதல்வராக மோடி இருந்த போது குஜராத்தின் தலைமை செயலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1975 ஆம் ஆண்டுப் பிரிவு IAS  அதிகாரியான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் தேர்தல் ஆணையத்தின் மூன்று நபர் கமிஷனில் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் நாள் வரை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாஜக அரசு இது போன்ற பதவிகளில் தாங்கள் விரும்பும் அல்லது தங்களுக்கு சாதகமான நபர்களை நியமிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம், தேர்தல் ஆணையத்தின், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனியாகச் சட்டம் இயற்றி ஏன் நியமிப்பதில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.

அனூப் பரன்வால் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றில், தேர்தல் ஆணையர் மற்றும் நீதிபதிகளின் நியமனத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையில் நியமனங்கள் நடைபெறுகிறது என்றும் தேர்தல் ஆணையர்கள் எந்த தகுதியின் அடிப்படையில் நியம்மிக்கப்படுகிரார்கள் என்றும் தற்போதைய தேர்தல் ஆணைய நியமனத்தில் எந்த சட்ட விதிகள் கடைபிடிக்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். .

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.ஓய்.சந்திரசூத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை நியமனம் செய்வது சட்டப்படி நடக்க வேண்டும் என்றும் ஆனால், இதுவரை இவர்கள் நியமனத்துக்கு அரசு சட்டம் ஏதும் உருவாக்கவில்லை என்றும் கூறியுள்ளது. மேலும் இதற்கென தனியே சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அரசு இந்த சட்டத்தினை இயற்றாவிட்டால் நீதிமன்றம் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும் கூறியுள்ளது.

Comments are closed.