குஜராத்தில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்கு தலித் இளைஞர் மற்றும் அவரின் தாய் மீது தாக்குதல்

0

கடந்த வருடம் குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உணா பகுதியில் நான்கு தலித் இளைஞர்கள் மீது அவர்கள் செத்த பசுவின் தோலை உரித்தனர் என்ற காரணத்திற்காக அவர்கள் மீது உயர் சாதியினர் தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

தற்போது குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இறந்த பசுவின் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர் மற்றும் அவர் தாய் மீது 15 பேர் அடங்கிய உயர் சாதி கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து காவல்துறையில் புகாரளித்த அந்த நபர் தன்னை தாக்கியவர்கள் அருகில் உள்ள கசோர் கிராமத்தை சேர்ந்த ராஜ்புட் இனத்தவர்கள் என்று கூறியுள்ளார். இவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டிற்குள் புகுந்து தன்னையும் தனது தாயையும் ஆபாச வார்த்தைகளை கூறி ஏசியதாகவும் அதனை எதிர்த்து கேட்ட அவர்களை கடுமையாக தாக்கிவிட்டு மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி சென்றதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சொஜித்ரா காவல்துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் தாமோர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 11  ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளானவர் இறந்த பசு ஒன்றை அதன் தோலை உரிக்க அருகில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து எடுத்து வந்ததாகவும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு அவர் சுடுகாடுஒன்றில் வைத்து மாட்டின் தோலை உரித்ததாகவும் இதுவே இந்த தாக்குதலுக்கு காரமாக அமைந்துள்ளது என்று தாமோர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய உயர் சாதி கும்பல் மீதி இந்திய குற்றப்பிரிவு 143, 323 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளிலும் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுகளிலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மீது மேலும் தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்க்க அவர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Comments are closed.