குஜராத்தில் சாதிக் கொடுமைகள் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற 7தலித் இளைஞர்கள்

0

குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில் இரு வேறு நிகழ்வுகளில் மொத்தம் 7 தலித் இளைஞர்கள் தங்களுக்கு எதிரான சாதிய கொடுமைகளை தாங்க இயலாமல் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

சமீபத்தில் இறந்த மாட்டின் தோலை அகற்ற முயன்றனர் என்று குற்றம் சாட்டி சில தலித் இளைஞர்கள் அரை நிர்வானமாக்கப்பட்டு பசு பாதுகாவலர்களால் கடுமையாக பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்டனர். இவர்கள் தாக்கப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இதனை அடுத்து இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சௌராஷ்டிரா முழுவதும் பலத்த போராட்டங்கள் வெடித்துள்ளன.

அதிகாரிகளின் கூற்றுப்படி கொண்டால் தாலுக்காவில் ஐந்து தலித் இளைஞர்களும் ஜம்கண்டோரனா நகரத்தில் இரண்டு தலித் இளைஞர்களும் விஷம் குடித்து தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் கருத்து மோதல் ஏற்பாட்டு வாக்குவாதம் நடந்துள்ளது.

தாக்கப்பட்ட தலித் இளைஞர்களுக்கு நீதி வேண்டியும் இவர்களை தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் பொதுமக்கள் கலக்டர் அலுவலகம் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனியும் இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் இறந்த விலங்குகளின் உடலை கிராமங்களில் இருந்து இனி தாங்கள் அகற்றப்போவதில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது கோபமுற்ற ஆர்பாட்டக்காரர்கள் பேருந்துகள் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் இவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

இது குறித்து ராஜ்கோட் பகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் அண்டிரிப் சூத் கூறுகையில்,” நிலைமையை கட்டுப்படுத்த நாங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என்றும் “தற்பொழுது நிலைமை கட்டுக்குள் உள்ளது போல காட்சியளிக்கிறது ” என்றும் கூறியுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் சுரேந்திரநகர் மாவட்டத்திலும் நிகழ்ந்துள்ளது. அங்கு ஆர்பாட்டக்காரர்கள் இறந்த விலங்குகளின் உடலை எடுத்து வந்து அதனை அப்புறப்படுத்த மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நகரம் முழுவதும் பேரணியும் நடத்தியுள்ளனர்.

தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் கூறுகையில், இந்த கொடூர சம்பவத்தால் தான் வேதனையடைந்துள்ளதாகவும், மேலும் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் தொடர்புடைய ஒரு காவல்துறை ஆய்வாளரும் இரண்டு காவலர்களும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.