குஜராத்தில் தற்கொலைக்கு தள்ளப்பட்ட தலித் மருத்துவ முதுகலை மாணவர்

0

ரோஹித் வெமுலா, முத்து கிருஷ்ணனை தொடர்ந்து மற்றுமொரு தலித் மாணவர் தான் பயிலும் இடத்தில் தனக்கு இழைக்கப்பட்ட ஜாதிக் கொடுமைகளினால் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நண்பர்களின் உதவியால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவர் தனது மருத்துவமனை படுக்கையில் இருந்தே இரண்டரை வருடங்களாக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார்.

அகமதாபாத் BJ மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை முதுகலை பட்டம் பயின்று வருபவர் மருத்துவர் மாரிராஜ். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த இவருக்கு பல்கலைகழகத்தில் இழைக்கப்படும் ஜாதிக் கொடுமைகள் குறித்து அவரது தாயார் இந்திரா தேசிய தாழ்த்தப்பட்டோர் கமிஷனிடம் கடந்த 2017 செப்டெம்பர் மாதமே புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், “எனது மகனுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு மருத்துவர் J.V.பார்த்திக், மருத்துவர் பார்த் தலால், மருத்துவர் பங்கஜ் மோடி, BJ மருத்த்துவ கல்லூரியின் தற்போதைய அறுவை சிகிச்சை பிரிவு தலைவர், இந்த ஜாதிக் கொடுமைகள் குறித்து விசாரிக்க BJ மருத்துவக் கல்லூரி ஏற்படுத்திய விசாரணை கமிஷன், மற்றும் BJ மருத்துவக்கல்லூரி ஆகியோர் தான் முழுக் காரணம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் எழுதப்பட்டு நான்கு மாதங்களில் மருத்துவர் மாரிராஜ் தனக்கு அன்றாடம் நிகழும் சாதிக் கொடுமையால் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயல்வதற்கு முன் ஜப்பானில் உள்ள தனது சகோதரரிடம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கூறி தனது முடிவையும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாரிராஜின் சகோதரர் இந்தியாவில் உள்ள அவர்களது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து மாரிராஜின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

சமூக வலைதளத்தில் காணக் கிடைக்கும் மருத்துவர் மாரிராஜின் வீடியோ ஒன்றில் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை அவர் விவரித்துள்ளார். அதில் மருத்துவரான தன்னை தனது பேராசிரியர்களும் தனது சக மாணவர்களும் 50 நபர்களுக்கு தேநீர் வாங்கி விளம்புமாரு வற்புறுத்துகிறார்கள் என்றும் தன்னை அவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பதில்லை என்றும் தன்னை தினம் தினம் அவர்கள் சித்திரவதை செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை எப்போது அறுவை சிகிச்சை செய்ய அனுமதிப்பீர்கள் என்று மருத்துவர் மாரிராஜ் கேள்வி எழுப்பியதற்கு அதனை தாங்கள் மட்டுமே தீர்மானிப்போம் என்று அவரது சக மாணவர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், “நான் இந்த பலகலைகழகத்தில் சேர்ந்த நாள் முதலேயே ஜாதி பாகுபாட்டிற்கு ஆளாக்கப்பட்டேன். என்னை அவர்கள் கேவலப்படுத்தினார்கள். என்னை மருத்துவமனை வார்டுக்கு வெளியே காத்திருக்கக் வைத்தனர். அறுவை சிகிச்சை அறைக்கு உள்ள கூட என்னை அனுமதிப்பதில்லை. என்னுடைய எண்னை தடுத்து  நோயாளிகள் குறித்து நான் பேசுவதை கூட தடை செய்தார்கள். இன்னும் எனது இளங்கலைப் பட்டம் போலியானது என்று கூறி அதனை சோதனையும் செய்து என்னை இழிவு படுத்தினார்கள். என்னுடைய இந்த யூனிட் மாற்றப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் யாரும் கண்டுகொள்வதாக இல்லை.” என்று கூறியுள்ளார்.

தனது மகனுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறும் மருத்துவர் மாரிராஜின் தாய், “மற்ற அனைத்து மருத்துவர்களும் வகுப்பில் பாடம் எடுக்க அனுமதிக்கப்படும் நிலையில் எனது மகனுக்கு மட்டும் அது மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் பங்கஜ் மோடி எனது  மகனை அவனது துறையில் வகுப்பெடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த மருத்துவர் பங்கஜ் மோடி, மருத்துவர் மாரிராஜ் ஒரு தலித் என்பது தனக்கு தெரியாது என்றும் விசாரணை குழு அமைத்த பின் தான் அவர் ஒரு தலித் என்று தனக்கு தெரிய வந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு காரணம், கல்லூரி டீன் அமைத்த இந்த விசாரணை குழுவில் தானும் ஒரு அங்கமாக இருப்பது தான் என்று அவர் தெரிவித்துள்ளார். தானும் ஒரு OBC வகுப்பை சேர்த்தவர் தான் என்றும் தங்களது துறைத் தலைவர் கூட ஒரு தாழத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் தான் என்றும் அதனால் இங்கு சாதி பாகுபாட்டிற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தன்மீதான சாதி கொடுமைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவே சரி இல்லை என்று கூறியுள்ளார் மருத்துவர் மாரிராஜ். “அதில் வெளி நபர்கள் இல்லை. எங்கள் துறையில் உள்ள நபர்களே உள்ளனர். எனது முதுகலை இயக்குனரிடம் இது குறித்து நான் கூறிய போது வேறொரு விசாரணை குழு அமைக்கபப்டும் என்று அவர் கூறினார். ஆனால் அவர்கள் இன்னும் அந்த குழுவை அமைக்கவில்லை.” என்று மாரிராஜ் தெரிவித்துள்ளார்.

தன் மீதான இந்த அனைத்து கொடுமைகளுக்கும் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்றும் இது போன்று இரண்டரை வருடங்கள் தான் துன்புறுத்தப் பட்டதாகவும் தெரிவித்த மருத்துவர் மாரிராஜ், இதன் மீது SC/ST கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தான்  நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை தமிழ்நாட்டில் உள்ள வேறு பல்கலைகழகத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர் மாரிராஜ் மருத்துவானையில் இருந்து பேசும் வீடியோ:

Comments are closed.