குஜராத்தில் 27 வயது தலித் பஞ்சாயத் தலைவர் படுகொலை

0

குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் தலித் பஞ்சாயத் தலைவரை உயர் சாதியை சேர்ந்த மூன்று பேர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தங்களது உத்தரவை மீறி ஒரு தாழ்த்தப்பட்டவர் தேர்தலில் நின்று வெற்றிபெற்றதால் ஆத்திரமடைந்து அவர்கள் ஜெயசுக் மதத் –ஐ கொலை செய்துள்ளதாக தெரிகிறது.

அம்ரேலியில் வரஸ்தா கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சுக் மதத்.  இவரை கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று மிரட்டியவர்கள் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அவகர்களது வீட்டிற்கு மதத்தை அழைத்துள்ளனர். அங்கு வைத்து அவரை இரும்பு கம்பிகளாலும் கூர்மையான ஆயுதங்களாலும் கடுமையாக தாக்கியுள்ளனர் என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் பர்மர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் ஜெய்சுக் மதத்திற்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளதை அடுத்து அவர் அம்ரேலி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூவர் மீது அம்ரேலி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, 34 ஆகியவற்றின் கீழும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 3(2)(5) ஆகிய பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதத்தின் மரணம் குறித்து காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

மதத்தின் கிராமத்தை சேர்ந்த மக்களை பொறுத்தவரை பஞ்சாயத் தலைவர் தேர்தலில் மதத் போட்டியிடக் கூடாது என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதத்தை மிரட்டியதாகவும் ஆனால் அவர் போட்டியிட்ட தொகுதி தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதி என்பதனால் மதத் அங்கு போட்டியிட்டு வென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மதத்தை கொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த மூன்று குற்றவாளிகளில் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துவிட்டதாகவும் மற்ற இரண்டு பேரை அவர்கள் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

குஜராத்தில் தலித்தகள் மீது பல்வேறு விதமான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. தேசிய குற்றவியல் ஆவன பணியகமான National Crime Records Bureau (NCRB) வின் அறிக்கையின் படி 2010 ஐ விட 2014 இல் தலித்கள் மீதான வன்முறைகள் 44%  அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 2010 இல் 32,712 ஆக இருந்த தாக்குதல் சம்பவங்கள் 2014 இல் 47,064 என உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் உயர் சாதியினரை ஒப்பிடும் போது தலித்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையை அவர்களுக்கு உணர்த்த நடத்தப்பட்டவையாக கருதப்படுகிறது.

Comments are closed.