குஜராத்: இறந்த பசுவை அப்புறப்படுத்திய தலித்கள் மீது கொலைவெறி தாக்குதல்

0

குஜராத்தின் கிர் சோம்னாத் மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி நான்கு தலித் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் குஜராத்தில் தலித்களுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது சம்பவம் இது. இறந்த மாட்டை அப்புறப்படுத்துவதற்காக அழைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தலித் இளைஞர்கள் சென்ற போது அவர்கள் மீது பேருந்து நிலையத்தில் வைத்து இந்த கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்ட அந்த இளைஞர்களை ஒரு வாகத்தில் கட்டி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை தடுக்க முற்பட்ட பொதுமக்களில் சிலரும் தாக்கப்பட்டனர்.
இந்த இளைஞர்களை தாக்கியவர்கள் தாங்கள் பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். ஒருவர் சிவசேனா இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பின்னர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தலித்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். பிரமோத்கிரி பாவாஜி, பால்வந்த் திருபாய், ரமேஷ் ஜாதவ், நக்ஜி வானியா, ராகேஷ் ஜோஷி மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஜாதவ், ஜோஷி மற்றும் நக்ஜி ஆகியோரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்ற வாரம் போர்பந்தர் மாவட்டத்தில் ராம சிங்ரகியா என்ற தலித் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.