குஜராத்: ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் பணி நீக்கம்!

0

சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் அரசாங்கம் செய்திருந்த பரிந்துரையில் பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கான உத்தரவில் ஆகஸ்ட் 13 அன்று உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
2002 குஜராத் இனப்படுகொலைகள் தொடர்பாக அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் சஞ்சீவ் பட். பிப்ரவரி 27, 2002 அன்று மோடியின் காந்திநகர் இல்லத்தில் வைத்து நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் தான் பங்குபெற்றதாகவும், ‘இந்துகள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று அப்போது முதல்வர் மோடி தெரிவித்ததாகவும் பட் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
ஆனால் உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு இதனை நிராகரித்தது. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மோடிக்கு எதிராக சஞ்சீவ் பட் ஆதாரங்களை வெளியிட தொடங்கியதை அடுத்து அவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. 1998ல் நடைபெற்ற ஒரு கஸ்டடி மரண வழக்கில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2002 கலவரங்கள் குறித்து பொய்யாக உறுதி சான்றினை (affidavit) தாக்கல் செய்ய பட் தன்னை வற்புறுத்தியதாக கான்ஸ்டபிள் ஒருவர் கொடுத்த புகாரை தொடர்ந்து சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார். 2011ல் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சமீபத்தில் பெண்மணி ஒருவருடன் பட் இருப்பதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு அதற்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. அந்த வீடியோ பதிவில் இருக்கும் நபர் தான் அல்ல என்று சஞ்சீவ் பட் கூறினார். இந்நிலையில், அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்தது, உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மதிக்காதது, மற்றவர்களின் அலுவலக வாகனங்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியது, அரசு ஊழியர்களுடன் தவறாக நடந்து கொணட்து உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளை சஞ்சீவ் பட் மீது சுமத்தி அவரை பணி நீக்கம் செய்துள்ளனர்.
மோடிக்கு எதிராக ஆதாரங்களை சமர்ப்பித்த அரசு அதிகாரிகள் குஜராத்தில் தொடர்ந்து குறி வைக்கப்பட்டனர். அதன் ஓர் அங்கமாக தற்போது சஞ்சீவ் பட் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.