குஜராத் கலவரத்தில் தந்தை மகளை கொலை செய்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை

0

2002 குஜராத் கலவரத்தின் போது மெஹ்சானா மாவட்டத்தில் தந்தை மகள் இருவரை கொலை செய்த வழக்கில் 11 பேரை குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது குஜராத் உயர்நீதி மன்றம். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் விடுவித்து விரைவு நீதிமன்றம் 2005 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை ரத்து செய்துள்ளது உயர் நீதி மன்றம்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது களுமியா சையத் மற்றும் அவரது மகள் ஹசினாபிபி என்பவர்கள் ஒரு வெறிபிடித்த கும்பலால் துரத்தி வந்தனர். தனது அண்டை வீட்டாரான முகேஷ் என்பவற்றின் வீட்டில் தஞ்சம் அடைந்தார் சையத். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி அவ்வீட்டின் கதவை உடைத்து அவரை வெளியில் இழுத்துப் போட்டது. மேலும் முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்று கூறி சையதின் அண்டை வீட்டாரான முகேஷ் மற்றும் அவரது தந்தையை கடுமையாக தாக்கியது. பின்னர் சையத் மற்றும் அவரது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு உயிருடன் கொளுத்தியது.

தீயில் இருந்து தங்களை காப்பாற்ற அருகில் உள்ள நீரில் இருவரும் குத்திதனர். ஆனால் அங்கிருந்தும் அவர்களை இழுத்து வந்து மறுபடியும் தீயிட்டு அக்கும்பல் கொளுத்தியது. காவல்துறை அங்கு செல்லும் முன்னர் இரவரும் உயிரிழந்துவிட்டனர். இவ்வழக்கு தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. விசாரணையில் மேலும் 12 பேர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

2005 ஆம் ஆண்டு விரைவு நீதிமன்றம் ஒன்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தது. இதனை தொடர்ந்து மாநில அரசு மற்றும் ஜம்மியத்துல் உலமா ஹிந்த் இணைந்து இவ்வழக்கை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பாக உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இவ்வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 15 பேர் மீதான விசாரணையை மட்டும் உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது. ஆறு நேரடி சாட்சியை விசாரித்து நீதிபதிகள் ஏ.எஸ்.தேவ், மற்றும் பி.என்.காரியா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பினை வழங்கியது.

Comments are closed.