குஜராத் காவல்துறை தலைவராக பிரிதிவி பால் பாண்டே நியமனத்திற்கு எதிராக வழக்கு

0

ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஜூலியோ ரிபீரோ இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பிணையில் வெளிவந்த பிரிதிவி பால் பாண்டே குஜராத் காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரிபீரோ 1980களில் குஜராத் காவல்துறையின் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி மத்திய அரசின் உத்தரவின் பேரில் குஜராத் காவல்துறை தலைவர் பி.சி.தாக்கூர் என்பவருக்கு மாற்றாக பாண்டே குஜராத் காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனது மனைவியின் உடல்நிலையை காரணம் காட்டி குஜராத்தை விட்டு தான் செல்லப் போவதில்லை என்று பி.சி.தாக்கூர் கூறியிருந்தார்.

தற்பொழுது பாண்டேவின் நியமனத்தை எதிர்த்து ரிபீரோ பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பின்னர் வழக்கறிஞராக மாறிய ராகுல் ஷர்மா என்பவர் மூலம் தாக்கல் செய்தார் ரிபீரோ.

இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், குஜராத் அரசின் இந்த முடிவுக்கு எதிராக தான் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் ஒரு தனிநபர் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட விரோதமும் இல்லை என்றும் அனால் தனது இந்த நடவடிக்கை கொள்கை அடிப்படையிலானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் அவர் கூறுகையில், ஒரு குற்றவாளியாக இருக்கும் ஒருவரிடம் குஜராத் அரசு காவல்துறை தலைவர் பதவியை கொடுத்திருக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார். பாண்டே காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டால் இது அவருக்கு எதிரான வழக்குளில் அவர் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் சாட்சியங்களை பாதிக்ககூடும் என்று ரிபீரோ கருத்து தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க அரசு ஆட்சியில் அமர்ந்ததும் தங்களுக்கு சாதகமானவர்களை வழக்குகளில் இருந்து விடுவித்து வருகிறது. அந்த வகையில் பாண்டேவுக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இன்னும் பாண்டேவின் பாஸ்போர்ட் சி,பி.ஐ. வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

19 வயது இஷ்ரத் ஜஹானை கடத்தி கொலை செய்ததாக பாண்டே வன்சாரா உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது, இதில் பாண்டே, வன்சாரா, ஜி.எல்.சிங்கால், என்.கெ.அமின் ஆகியோர் பிணையில் வெளிவந்துள்ளனர்.

மேலும் படிக்க: இஷ்ரத் ஜஹான்

Comments are closed.