குஜராத்: மீன் பிடிப்பது பிராமணர்கள் மனதை புண்படுத்துவதால் மீனவர்களின் உரிமம் ரத்து

0

குஜராத்: மீன் பிடிப்பது பிராமணர்கள் மனதை புண்படுத்துவதால் மீனவர்களின் உரிமம் ரத்து

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரதாப்சாகர் ஏரியில் மீனவர்கள் மீன் பிடிப்பது பிராமணர்களின் மனதை புண் படுத்துவதாக கூறி மீனவர்களின் மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செப்டெம்பர் 9 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு குஜராத் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதி ஆனந்த் S தேவ் மற்றும் நீதிபதி பிரென் வைஷ்ணவ் ஆகியோர் குஜராத் அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர்.

குஜராத் சபர்கந்த் மாவட்டத்தை சேர்ந்த ஆஷாபென் P மக்வானா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த மனுவில்,

2017 ஜூன் மாதம் பிரதாப்சாகர் ஏரியில் மீன்பிடிக்கும் டெண்டரை அரசு அறிவித்தது என்றும் தங்களது டெண்டர் அக்டோபர் 24 ஆம் தேதி அரசால் அங்கீகரிக்கப்பட்டு 2022 ஜூன் மாதம் வரை அங்கு மீன் பிடிப்பதற்கு தங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரதாப்சாகர் ஏரியில் மீனவர்கள் மீன் பிடிப்பது அனுமதிக்கப்படுவதால் பிராமண சமூகத்தை சேர்ந்த சிலரின் மத உணர்வுகள் புண்படுகின்றது என்று கூறி சிலர் புகார் செய்த காரணத்தினால் இவ்வருடம் பிப்ரவரி 2 ஆம் தேதி சபர்கந்த் மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் மீன் பிடிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்ட போதே ஹீராலால் பூனம்லால் ஜோஷி என்பவர் பிரதாப்சாகர் ஏரியில் மீன் படிக்க அனுமதிக்கப்படுவது மத உணர்வுகளை புண்படுத்துகின்றது என்று கூறி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தொடர்ந்தார் என்றும் ஆனால் அதனை அவர் இவ்வருட ஏப்ரல் மாதம் திரும்பப் பெற்றுக்கொண்டார் என்றும் ஆஷாபென் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த ஏரியில் மீன் பிடிப்பதில் தனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை என்றும் கடிதம் மூலமாக அவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தனது பொதுநல மனுவை திரும்பப் பெற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மீன்பிடி தடையை திரும்பப் பெறவில்லை என்று ஆஷாபென்னின் வழக்கறிஞர் சுப்ரமணியம் ஐயர் தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணத்தை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெருகையில், அப்பகுதியில் உள்ள சிலர், பிரதாப்சாகர் ஏரியில் மீன் பிடிப்பது பிராமணர்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று கூறி ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளித்தது தெரியவந்துள்ளது.

Comments are closed.