குஜராத் 2002:வெளிநாட்டினரை கொலை செய்த வழக்கிலும் அனைவரும் விடுதலை

0

மூன்று இங்கிலாந்து பிரஜைகள் மற்றும் அவர்களின் டிரைவரை உயிரோடு எரித்து கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு நபர்களையும் விடுவித்து குஜராத் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிப்ரவரி 28, 2002 அன்று இம்ரான் தாவூது, பிரிட்டனை சேர்ந்த அவரின் மூன்று உறவினர்கள் மற்றும் அவர்களின் டிரைவர் ஆகியோரை வடக்கு குஜராத்தில் உள்ள பிரான்ஜித் என்ற இடத்தில் வைத்து தாக்கியது ஒரு கும்பல்.இதில் இருவர் சம்பவ இடத்திலேயே கொலை செய்யப்பட்டனர்.தப்பித்து சென்ற இருவரும் துரத்தி பிடிக்கப்பட்டு உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர்.இம்ரான் மட்டும் அந்த கும்பலிடமிருந்து தப்பினார்.
இந்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவான எஸ்.ஐ.டி.யிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது.எஸ்.ஐ.டி. ஆறு நபர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய ஹிம்மத்நகர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதாக கூறி அனைவரையும் விடுவித்துள்ளது.
வழக்கை தொடுத்த இம்ரான், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சாட்சியம் அளித்தார்.ஆனால் அவர் குற்றவாளிகளை அடையாளம் காட்டவில்லை என்று எதிர் தரப்பு வக்கீல் கூறினார்.வழக்கு விசாரணையின் போது மூன்று சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
நீண்ட வருடங்கள் வழக்கு இழுத்தடிக்கப்பட்டதே இத்தகைய தீர்ப்பு வருவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.