குஜராத் 2002: தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

0

குஜராத்தில் 2002ல் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப் படுகொலையின் போது பில்கிஸ் பானு என்ற பெண்மணி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது. அத்துடன் வழக்கின் விசாரணையை முறையாக மேற்கொள்ளாத காவல்துறையினரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தது. ஆனால் இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் ஏற்கனவே பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர் என்றும் அவர்களின் ஓய்வூதியத்தையும் இதர சலுகைகளையும் நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி இவ்வருடம் ஓய்வு பெற உள்ளார் என்று பானு சார்பாக வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் ஷோபனா குப்தா தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தனக்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 5 லட்சம் ரூபாயை பெற்றுக் கொள்ள பில்கீஸ் மறுத்துவிட்டார். உயர்வான சீரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும்.

Comments are closed.