குடியரசு தின கொண்டாட்டங்கள் நடத்திய முஸ்லிம்கள் மீது ABVP, VHP தாக்குதல். செய்தியை திரித்து அவதூறு பரப்பும் செய்தியாளர்கள்

0

உத்திர பிரதேச மாநிலம் காஸ்கஞ் பகுதியில் உள்ள வீர் அப்துல் ஹமீத் சந்திப்பில் குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தேசிய கோடி ஏற்றிக்கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த இந்துத்வா கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. தேசியக் கொடி ஏற்றப்பட்டிருந்த கம்பத்தை சேதப்படுத்தியும் கொடி கம்பத்தின் கீழ் போடப்பட்டிருந்த ரங்கோலியை களைத்தும் அக்கும்பல் அராஜகம் செய்ததால் அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து ஓடிய அக்கும்பல் சாலையில் உள்ள வாகனங்களுக்கு தீவைத்தும் பொது மற்றும் தனியார் உடைமைகளை சேதப்படுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஆஜ்தக் செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு செய்தியாளர்களான ரோஹித் சார்தனா மற்றும் ஸ்வேதா சிங் என்பவர்கள் காஸ்கஞ் பகுதியில் மூவர்ண கொடியை தாங்கி வந்த ABVP மற்றும் VHPயினர் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தியதாக தவறாக அவதூறு பரப்பியுள்ளனர்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு செய்த ரோஹித் சார்தனா, தேசிய கொடியை பறக்கவிட நினைத்ததால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இந்துதவ கும்பல் தான் முஸ்லிம்களின் குடியரசு தினக் கொண்டாட்டத்தை சீர்குலைத்தது என்ற உண்மை வெளியான பின்னரும் அவர் தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் அவர் இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிய போது, “மூவர்ண கொடியை இந்தியாவில் ஏற்ற நினைத்தால் கலவரம் தானா?” என்ற கேள்வியுடன் தொடங்கினார். இத்துடன் அப்பகுதி முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய குற்றச்சாட்டுகளை காவல்துறை கூட இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு செய்தியாளரான ஸ்வேதா சிங், இவரை விட மோசமான கருத்துக்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், குடியரசு தினத்தை கொண்டாடிய ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போது காஸ்கஞ் பகுதி எப்படி இந்தியாவில் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். களநிலவரம் வேறாக இருப்பதை அவர் மறைத்துவிட்டார். இந்த ஸ்வேதா சிங் யாரென்றால் மோடி அரசால் புதிய 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதில் GPS சிப் பொருத்தப்பட்டுள்ளது என்று கூறி ஊடக பிரபலம் அடைந்தவர்.

இந்த செய்தியாளர்களின் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துக்களுக்கு கடும் கன்னடங்கள் எழுந்துள்ளன. பலர் இந்தியா டுடே நிறுவனருக்கு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகோள் வைத்துள்ளனர். அப்படி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்தியா டுடே நிறுவனத்தையே தாங்கள் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது பாஜக இந்துத்வா ஆதரவை மறைமுகமாக காட்டி வந்த இந்த செய்தியாளர்கள் தற்போது வெளிப்படையாக அதனை வெளிக்காட்ட தொடங்கியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த போக்கை மூத்த பத்திரிகையாளர் அபிஷார் ஷர்மா கடுமையாக கண்டித்துள்ளார். ஆஜ் தக் தொலைகாட்சி மற்றும் இந்த பத்திரிகையாளர்களின் பெயர்களை வெளிப்படையாக குறிப்பிடாத அவர் இவர்களின் செயலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் வன்மையாக கண்டித்துள்ளார். இவரின் இந்த செயலை பலர் பாராட்டியுள்ளனர்.

இத்துடன் இந்த கலவரத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட ராகுல் உபாத்யாய் என்பவர், தான் உயிருடன் உள்ளதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். காஸ்கஞ் பகுதியில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் உபாத்யாய், தான் அலிகாரில் உள்ள நக்லா காஞ்சியில் இருந்த போது தனது மரணம் தொடர்பான செய்திகள் தனக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனது மரணம் குறித்து முதல் அழைப்பு வரும் போது தான் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்ததாகவும் பின்னர் அழைப்புகள் தொடரவே ஏதோ விபரீதம் நடைபெற்றுள்ளது என்று புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னை பயன்படுத்தி மேலும் வன்முறையை தூண்ட சிலர் எண்ணுகிறார்கள் என்று நான் உணர்ந்து கொண்டேன். அந்த பரப்புரை இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று இருந்தது. உடனே நான் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை அணுகினேன்.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அலிகார் IG சஞ்சீவ் குப்தா கடந்த திங்களன்று உபாத்யாயால் எவ்வளவு அதிகமாக ஊடகவியலாளர்களை காண முடியுமோ அவ்வளவு அதிகமானவர்களை காணும்படி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “சமூக ஊடகங்களில் பரப்படும் புரளிகளுக்கு மாற்றமாக உபாத்யாய் இன்று உயிருடன் உள்ளார்.” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வதந்தி தொடர்பாக நான்கு பேர்களை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.