குடியுரிமை (திருத்த) மசோதாவின் அபாயம்!

0

குடியுரிமை (திருத்த) மசோதாவின் அபாயம்!

வற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தில் நம்பிக்கைக் கொண்ட இந்திய சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடிய, முஸ்லிம்களை மட்டும் தவிர்த்த குடியுரிமை (திருத்த) மசோதா அரசியல் சாசனத்தின் உயரிய மதிப்பீடுகளுக்கு முற்றிலும் எதிரானது. இந்தியா போன்ற பன்முக தேசத்தில் குடியுரிமை என்பது மதம், தேசம், சாதி, மொழி, பாலினம், பொருளாதார தரம் கடந்த ஒன்றாகும். குடியுரிமையில் இங்கு யாருக்கும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. ஒரு நாகரீகமான தேசத்தில் இதுபோன்ற பாகுபாடுகளை அங்கீகரிக்கவும் முடியாது. இது இதர மதத்தவர்களுக்கு இந்திய குடியுரிமையை எளிதாக்கி, முஸ்லிம்களுக்கு மட்டும் நிராகரிக்கும் பாரபட்சமான மசோதாவாகும். 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு புகலிடம் தேடி வந்த ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானை சார்ந்த இந்து, சீக்கிய, ஜைன, பார்ஸி, பௌத்த மற்றும் கிறிஸ்துவ மத சமூகங்களை சார்ந்த அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை வழங்க அனுமதி அளிக்கிறது. அதே வேளையில் மற்றொரு அண்டை நாடான மியான்மரில் கடும் இன்னல்களை சந்திக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை இந்த மசோதா தவிர்த்துள்ளது. இது பா.ஜ.க. அரசின் தீவிர வகுப்புவாத வெறியை எடுத்துக்காட்டுகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் இந்த மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்.

மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் இந்த மசோதா 1985ல் கையெழுத்தான அஸ்ஸாம் உடன்படிக்கையை மீறுவதாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே சுட்டிக்காட்டினார். அகதிகளுக்கு வாசலை திறந்து கொடுப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என்று வாதிடுபவர்கள், முஸ்லிம்களுக்கு மட்டும் மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில்லை.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடிமக்கள் (திருத்த) மசோதா, வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக, அஸ்ஸாமிலும் திரிபுராவிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று மேகாலயா, மிசோராம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாநிலங்கள் மசோதாவை எதிர்ப்பதற்கு காரணம் அதன் உள்ளடக்கமே தவிர அதன் வகுப்புவாத நோக்கம் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. மசோதாவில் ஓட்டைகள் காரணமாக வெளியே இருந்து தங்களுடைய பகுதிகளில் மக்கள் நுழைந்துவிடுவார்களோ என்று அஸ்ஸாம் கன பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் அச்சப்படுகின்றன. இதே கட்சிகள் தேசிய குடியுரிமை பதிவேட்டை (என்.ஆர்.சி.) ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. வங்காள மொழி பேசும் அஸ்ஸாமியர்களை முழுவதுமாக வெளிநாட்டினராக முத்திரை குத்தி சந்தேகத்தின் நிழலில் நிறுத்துவது அல்லவா தேசிய குடியுரிமை பதிவேடு? அவ்வாறு வெளியேற்றப்படுபவர்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள் என்பதால் யாருக்கும் எவ்வித கவலையும் கிடையாது.

குடியேற்றம் என்பது ஒரு நிதர்சனமாகும். எவ்வளவுதான் தடுத்தாலும் அது நிகழ்ந்து கொண்டுதானிருக்கும். ஆனால், வெளியே இருந்து புகலிடம் தேடி வருபவர்களில் மதவாதத்தை கலப்பதன் பின்னணியில் தெளிவான அரசியல் செயல்திட்டம் உள்ளது. தேசத்தின் பாதுகாப்பு, உள்ளூர் மக்களின் நலன்களை பாதுகாப்பது என்றெல்லாம் பா.ஜ.க. சொல்லிக்கொண்டாலும், தேர்தல் கணக்குகளைக் குறிவைத்து அக்கட்சி இதில் இறங்கியிருக்கிறது என்றே தெரிகிறது. மாநிலங்களவையிலும், நீதிமன்றத்திலும் இந்த மசோதா தோல்வியை தழுவும் என்று தெரிந்தும் இத்தகைய முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொள்வதற்கு காரணம் ‘இந்துக்களின் பாதுகாவலர்கள் நாங்கள்தான்’ என்று பரப்புரைச் செய்வதற்கே.

அரசுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவுதான் மதச்சார்பின்மை. அரசு என்பது எந்தவொரு மதத்திற்கும் ஆதரவான அல்லது எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது. அனைத்து மதத்தினருக்கும் சம கவனம் அளிக்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மையின் சாரம். அது அரசியல் சாசனம் சார்ந்த விழுமியமாகும். தேசம் வழங்கும் எந்தவொரு சலுகையையும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் மறுக்கும் நிலை இருக்கக் கூடாது. அரசியல் சாசன நிறுவனங்களையும் நடைமுறைகளையும் காலால் மிதித்துவிட்டு வாக்கு வங்கி அரசியலுக்காக நடத்தப்படும் பா.ஜ.க.வின் மோசமான விளையாட்டை மக்கள் மன்றத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் தோலுரித்துக் காட்ட வேண்டும்.

Comments are closed.