குடும்ப வாழ்வு ஒரு வணக்கம்

0

4குடும்ப வாழ்வு ஒரு வணக்கம், ஒரு இபாதத் என்பது இஸ்லாம் வலியுறுத்தும் ஒரு முக்கிய விஷயமாகும். குடும்ப வாழ்வு ஒரு இபாதத் என்று சொல்லும் போது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இது மத வேறுபாடின்றி எல்லா மனிதர்களும் மேற்கொள்ளும் ஒரு சாதாரண மனித நடவடிக்கை தானே, அவ்வாறிருக்க இதற்கு இபாதத் என்ற அந்தஸ்து எவ்வாறு வழங்கப்பட முடியும்? நியாயமாக பலருக்கு இந்தக் கேள்வி தோன்ற முடியும்.

உண்மையில் இங்கு குடும்ப வாழ்வு ஒரு இபாதத் என்பதன் கருத்து என்ன?

முதலாவது, மனித வாழ்வு குறித்த அல்குர்ஆனுடைய பார்வை தனித்து பொருள் மையப்பட்டதன்று. மாற்றமாக அது அல்லாஹ்வையும் கூட்டிணைத்ததாகவே காணப்படுகின்றது. இதனைக் குறிக்கும் விதமாகவே அல்குர்ஆன் மிகத் தெளிவாக இவ்வாறு பேசுகின்றது. “நபியே! எனது தொழுகை, எனது வணக்கங்கள், எனது வாழ்வு, எனது மரணம் அனைத்தும் உலகத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வுக்குரியது. அவனுக்கு எந்த இணையுமில்லை. இவ்வாறுதான், நான் ஏவப்பட்டிருக்கிறேன். நான்தான் முதலாவது முஸ்லிம் என்று கூறுங்கள்” (அன்ஆம் 162,163) என்று அல்குர்ஆன் நபியவர்களைப் பார்த்து போதனை செய்கிறது.

இங்கு அல்குர்ஆன் மனித வாழ்வை அல்லாஹ்வை விட்டும் வேறாக்கிப் பார்க்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் அல்லாஹ்வுக்கானதாகவே அமைய வேண்டும் என்று சொல்வதன் மூலம் வாழ்வுக்கு ஒரு ஆன்மீக அர்த்தத்தைக் கொடுக்கின்றது. குடும்ப வாழ்வும் வாழ்வின் ஒரு பகுதி என்றவகையில் அதற்கும் இதே ஆன்மீக அர்த்தம் காணப்படுகிறது என்பது குடும்ப வாழ்வு ஒரு இபாதத் என்பதன் முதலாவது கருத்தாகும்.

குறிப்பாக குடும்ப வாழ்வின் ஆன்மீக சிறப்பை அல்குர்ஆனும் சுன்னாவும் பல்வேறு கண்ணோட்டங்களில் வலியுறுத்தியிருப்பதையும் காணலாம். உதாரணமாக, துணைத் தெரிவைப் பற்றிக் கூறும்போது “ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுவாள். அழகு, செல்வம், குடும்ப கௌரவம், மார்க்கம். இவற்றில் மார்க்கம் உள்ள பெண்ணை தெரிவு செய்து கொள். இல்லாத போது உனது வாழ்வு அழிந்துவிடும்” (ஸஹீஹ் ஜாமிஃ) என்று நபியவர்கள் கூறினார்கள். இது குடும்ப வாழ்வை ஒரு இபாதத் வேலைத்திட்டமாகவே விளங்கப்படுத்துகிறது.

இனி இரண்டாவது கருத்துக்கு வருவோம். குடும்ப வாழ்வை இஸ்லாம் உலகில் தோன்றிய எல்லா நபிமார்களின் சுன்னா என்று அறிமுகப்படுத்துகிறது. அல்குர்ஆன் இந்தக் கருத்தை இவ்வாறு விளக்குகிறது. “நபியே உங்களுக்கு முன்னரும் பல தூதுவர்களை நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு மனைவிமார்களையும் சந்ததிகளையும் நாம் வழங்கியிருந்தோம்.” (ரஃத் 38)

இங்கு குடும்பம் என்பது எல்லா நபிமார்களின் வாழ்க்கை முறையாக இருந்தது என்பது வலியுறுத்தப்பட்டது போல் அந்த வாழ்வு முறை அல்லாஹ்வின் ஏற்பாடு, அவன் அளித்த ஒரு அருள் என்பதையும் உணர்த்தி செல்வதை காணலாம்.

நபியவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “திருணம் எனது சுன்னாவாகும். எனது சுன்னாவை நிறைவேற்றாதவன், என்னைச் சார்ந்தவனல்ல” (ஸஹீஹ் ஜாமிஃ). இந்த ஹதீஸ் குடும்ப வாழ்வு நபியவர்களது சுன்னா என்பதையும் அதனை தவிர்த்து வாழ்வது இந்த உம்மத்தின் இயல்பு அல்ல என்பதையும் குறிப்பிடுகிறது. அந்தவகையில் திருமணம் அல்லது குடும்ப வாழ்வு என்பது தூதுவர்களின் வாழ்க்கை முறை என்ற வகையில் அது ஒரு வணக்கமாக மாறுகிறது.

குடும்ப வாழ்வு ஒரு வணக்கம் என்பதன் மூன்றாவது கருத்து, குடும்ப வாழ்வின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் நன்மைகள் கிடைக்கின்றன என்பதாகும். இது அல்குர்ஆனும் சுன்னாவும் மிகவும் அழுத்தமாக வலியுறுத்திய ஒரு உண்மையாகும்.

குடும்ப வாழ்வின் மிகப் பிரதானமான செயற்பாடுகள் அனைத்தும் நன்மைகளை அள்ளி வழங்கும் செயல்கள் என்றே அல்குர்ஆனும் சுன்னாவும் அறிமுகம் செய்கின்றன.

குடும்பத்திற்காக செலவு செய்தல் குறித்து நபியவர்கள் கூறியுள்ளதைப் பாருங்கள். “அல்லாஹ்வின் பாதையில் ஒரு தீனாரை செலவு செய்கிறாய், ஒரு அடிமையை விடுதலை செய்வதற்காக ஒரு தீனாரை செலவு செய்கிறாய், உனது குடும்பத்திற்காக ஒரு தீனாரை செலவு செய்கிறாய். இவற்றில் மிகப் பெரிய நன்மையை பெற்றுத் தருவது உனது குடும்பத்திற்காக செலவு செய்த ஒரு தீனாராகும்” என்றார்கள். (முஸ்லிம்)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை சற்று கவனித்துப் பாருங்கள். இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொன்றும் மிகப்பெரும் நிதியை வேண்டி நிற்கும் விவகாரங்கள். ஒன்று இஸ்லாமிய தஃவா, இரண்டு மனித உரிமைகள் விவகாரம். உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடிய மிகப்பெரிய விவகாரங்கள் இவை. இவற்றை விடவும் குடும்பத்திற்காக செலவு செய்தல் அதிக நன்மைகளை பெற்றுத் தரக் கூடியதாகும்.

இந்தப் பின்புலத்திலேயே “உனது மனைவியின் வாயில் வைக்கும் உணவுக்கும் உனக்கு நன்மைகள் கிடைக்கின்றன” (புஹாரி) என நபியவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் வெறுமனே மனைவிக்கு உணவளித்தல் என்ற எல்லையை மாத்திரம் குறிப்பிடாமல் கணவன் மனைவிக்கிடையிலான ஒரு அந்நியோன்னிய உறவையும் குறித்துக்காடுகிறது. அதுவும் நன்மை தரக்கூடிய ஒரு விஷயமாகும். வெறுமனே உணவளித்தல் என்று குறிப்பிடாமல் உணவை ஊட்டி விடுதல் என்று சொல்லப்பட்டதிலிருந்து இக்கருத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

அடுத்து, கணவன் மனைவிக்கிடையிலான பிரத்தியேகமான உறவை குறிப்பிடும் போதும், அதுவும் நன்மையை பெற்றுத் தரும் செயற்பாடு என நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

“நீங்கள் உங்கள் மனைவியுடன் உறவு கொள்வதும் ஸதகாவாகும்” என்றார்கள். ஸஹாபாக்கள் ஆச்சரியத்துடன் ஒருவர் தனது ஆசையை தீர்த்துக் கொள்வதற்கும் கூலி இருக்கிறதா? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “அவர் ஹராமான வழியில் தனது ஆசையை தீர்த்துக் கொண்டால் அதற்கு குற்றம் இருக்கிறதுதானே, அதுபோல் ஹலாலான வழியை பயன்படுத்தினால் அதற்கு நன்மை இருக்கிறது” என்றார்கள். (முஸ்லிம்)

இதனை வெறுமனே மனித உடம்பு சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியாக மட்டுமே நாம் பார்த்து பழகி விட்டோம். ஆனால்,  இஸ்லாம் அதனை நன்மை தரும் ஒரு செயற்பாடு என்று சொல்கிறது.

இந்த நிகழ்ச்சி மாத்திரமின்றி கணவன் மனைவிக்கிடையிலான அன்பு பரிமாற்றத்தையும் காதல் விளையாட்டுகளையும் கூட நன்மை தரும் செயற்பாடுகள் என நபியவர்கள் அடையாளம் காட்டுகிறார்கள். கீழ்வரும் இரண்டு ஹதீஸ்களையும் பாருங்கள்.

“ஒருவன் தனது மனைவியைப் பார்க்கிறான். மனைவி அவனைப் பார்க்கிறாள், இப்பொழுது அல்லாஹ்தஆலா அவர்கள் இருவர் மீதும் தனது அருட்பார்வையை செலுத்துகின்றான். அவன் தனது மனைவியின் கையைப் பிடித்தால் அவர்களது விரல்கள் ஊடாக இருவரது பாவங்களும் விழுந்து விடுகின்றன” என்றார்கள். (ஸஹீஹ் ஜாமிஃ)

“ஒருவன் தனது மனைவியுடன் கொஞ்சிக் குழாவுவதைப் பார்த்து அல்லாஹ்தஆலா சந்தோஷப்படுகிறான். அதற்காக அவர்களுக்கு நன்மைகளை எழுதுகிறான் அல்லது அதன் மூலம் அவர்களுக்கு ஹலாலான ரிஸ்க்கை வழங்குகிறான்.” (ஸஹீஹ் ஜாமிஃ)

அடுத்து, குடும்ப வாழ்வின் மற்றொரு முக்கியப்பணி பிள்ளை வளர்ப்பு. இதுபற்றி நபியவர்கள் பேசிய உண்மைகளைப் பாருங்கள். பொதுவாக பெண் பிள்ளைகளைப் பற்றி பேசும்போது அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல், ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தல், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தல், அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுதல், அவர்களை இழிவுபடுத்தாதிருத்தல், ஆண் பிள்ளைகளை அவர்களை விடவும் முற்படுத்தாதிருத்தல், அவர்கள் விரும்பாத ஒருவருக்கு வற்புறுத்தி திருமணம் செய்து வைக்காதிருத்தல் போன்ற பல விஷயங்களை ஹதீஸ்கள் பேசுகின்றன.

இவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவோர்க்குரிய நன்மைகள் என்ன என்று சொல்லும் போது அவர்களுக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்றும் மறுமை நாளில் நபியவர்களுடன் இருப்பார்கள் என்றும் நரகம் செல்லாமல் அந்தப் பிள்ளைகளே தடைச் சுவராக காணப்படுவார்கள் என்றும் ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன.

இங்கு பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு சாதாரண மனித நடவடிக்கையாக மாத்திரமின்றி மறுமையில் வெற்றி பெறுவதற்கான ஒரு வழியாக அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பிள்ளை வளர்ப்பு என்பதையும் நன்மை தரும் ஒரு செயற்பாடாக இஸ்லாம் கருதுகிறது.

அடுத்து, கணவன் மனைவிக்கிடையிலான பரஸ்பர திருப்தி நிலை குறித்து பேசுகின்ற பொழுது, “ஒரு பெண் மரணிக்கின்ற பொழுது, அவனது கணவன் அவள் பற்றிய திருப்தியுடன் காணப்படுவான் எனின், அவள் சுவர்க்கம் நுழைவாள்” என நபியவர்கள் கூறினார்கள். இதுவும் குடும்ப வாழ்வை ஒரு வணக்கவழிபாட்டுத் திட்டமாகவே அடையாளப்படுத்துகிறது.

எனவே, குடும்ப வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நன்மைகளைத் தருகின்ற செயற்பாடுகள் என்றே இஸ்லாம் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இஸ்லாத்தின் பார்வையில் இது ஒரு சாதாரண மனித நடவடிக்கை மாத்திரமின்றி இது ஒரு வணக்கம் என்பதை புரிந்து கொள்கிறோம்.

இந்த வகையில் குடும்ப வாழ்வு குறித்து நமது பார்வைகளில், உணர்வுகளில் என்ன மாற்றம் நிகழ வேண்டும் என்பதையே இந்த ஆக்கம் பேசுகிறது. குடும்ப வாழ்க்கை ஏன்? என்று கேட்கின்ற பொழுது அது வெறுமனே உலகியல் நலன்களை பெற்றுக் கொள்வதற்கான ஒரு பொறிமுறை என்ற எல்லையைத் தாண்டி அது நன்மைகளை பெற்றுக் கொள்வதற்காக ஒரு அமல், மறுமையில் வெற்றி பெறுவதற்கான ஒரு செயல், அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழி என்ற பார்வையும் நம்மிடத்தில் ஆழமாய்  வேர் ஊன்ற வேண்டும். அப்பொழுதுதான் நமது குடும்ப வாழ்வில் சந்தோஷம் வாழும்.

அல்லாஹ் நம்மை அங்கீகரிப்பானாக.

Comments are closed.