குண்டுவெடிப்பு வழக்கில் 23 வருடங்கள் கழித்து ஆறு பேர் விடுதலை!

0

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆக்ரா – ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ராஜஸ்தான் அரசு பேருந்தில் மே 22, 1996 அன்று நடைபெற்ற குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்தனர்.

டெல்லி லஜ்பத் நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததற்கு மறுதினம் இந்த குண்டுவெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் மொத்தம் எட்டு நபர்களுக்கு தண்டனையை, செப்டம்பர் 29, 2014 அன்று விதித்தது விசாரணை நீதிமன்றம். உத்தர பிரதேசத்தை சேர்ந்த மருத்துவரான அப்துல் ஹமீது முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கில் தண்டனை பெற்றவர்கள் ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபீனா மற்றும் கோவர்தன் பர்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாவித் கான், அப்துல் கனி, லதீப் அகமது, முகமது அலி பட், மிர்ஸா நிசார் ஹூஸைன் மற்றும் ரயீஸ் பேக் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்று கூறி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது.

இதில் முதல் ஐவரும் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் ஹமீது மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சலீம் ஆகியோரின் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது விடுதலை செய்யப்பட்ட ஆறு நபர்களும் இந்த 23 வருடங்களில் ஜாமீன், பரோல் எதுவும் வழங்கப்படாமல் சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.