குமரி மாவட்டத்தில் பாஜக வன்முறை! – அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

0
இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது;
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் முத்துராமன் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று காலை தாக்கப்பட்டுள்ளார். இதனை காரணமாக வைத்து நாகர்கோவில் இடலாக்குடி வெள்ளாடிச்சிவிளை பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளுக்குள் பாஜகவினர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
வன்முறை தாக்குதலை நடத்தியவர்கள் வீடுகளில் உள்ள பெண்களையும் தரக்குறைவாக பேசியுள்ளனர். மேலும் அவர்களின் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் பலத்த காயமடைந்து இடலாக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜகவினரின் இந்த அராஜக செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மர்ம நபர்களின் தாக்குதலுக்கு ஆளான பாஜக நிர்வாகியை தாக்கியவர்கள் யார் என்பதை கண்டறியும் முன்னரே அதனை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பும் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் தாக்குதலுக்கு ஆளான பாஜக நிர்வாகி ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வருவதால் அதன் காரணமாக எவரேனும் முன்விரோதம் காரணமாக தாக்கினார்களா என காவல்துறை கண்டறியும் முன்னரே, பாஜக வினர் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆகவே பாஜக நிர்வாகியை தாக்கிய உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதோடு, முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீதும், முஸ்லிம்களுக்கு எதிராக இந்த பிரச்சனையை திசை திருப்பி விடுபவர்கள் மீதும் காவல்துறை சட்டப்படி கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பொதுவாகவே இதுபோன்ற சம்பவங்களை முன்வைத்து பாஜக மேற்கொள்ளும் வன்முறை தாக்குதலும், அதன் காரணமாக முழு அடைப்பு நடத்தி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் குமரி மாவட்டத்தில் தொடர் கதையாகி வருகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற தாக்குதல் மூலம் 100 க்கும் மேற்ப்பட்ட அரசு பேருந்துகள் சேதமடைந்துள்ளன. அதற்காக அவர்களிடமிருந்து இதுவரை அரசு இழப்பீடு எதனையும் பெறவில்லை.
இந்நிலையில் இன்றைய இச்சம்பவத்தை காரணமாக வைத்து நாளை கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் முழு அடைப்பை நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது. கடந்த காலங்களைப் போலவே அவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அம்மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஆகவே, காவல்துறை சிறுபான்மை மக்களையும், அவர்களின் வணக்கஸ்தலங்களையும் பாதுக்காக்கும் பொருட்டும், அவர்களின் அச்சத்தினை போக்கும் வகையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments are closed.