குர்ஆன் பாடம்: முஸ்லிமல்லாத நண்பர்கள்

0

முஸ்லிமல்லாத நண்பர்கள்

‘‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 60:8)

இஸ்லாமிய கொள்கை சமூகத்திற்கு எல்லா காலக்கட்டங்களிலும் எதிரிகள், நண்பர்கள் என இரண்டு வகையான மனிதர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். நம்மோடு சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டு சகவாழ்வை பேணும் முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்மையையும் நீதியையும் மட்டுமே செய்ய வேண்டும். இந்தியாவில் முஸ்லிமல்லாதவர்களில் பெரும்பாலோர் இவ்வகையினராவர்.

அண்டை வீட்டுக்காரர், நண்பர், பள்ளி மற்றும் கல்லூரி தோழர், சக பயணி, சக ஊழியர், ஒப்பந்தக்காரர், பணியாளர்கள் என்ற நிலைகளில் அவர்களுக்கு மற்ற எவரையும் விட கண்ணியமும், நம்பகத்தன்மையும், தயாள குணமும் ஒரு முஸ்லிமிடமிருந்து கிடைக்க வேண்டும். இதுதான் குர்ஆன், ஹதீஸின் அறிவுறுத்தல். ஆனால், அந்த பண்பு தனது மார்க்க விவகாரங்களை விட்டுக் கொடுத்து பிறரை திருப்திப்படுத்துவதற்காக அமைந்துவிடக் கூடாது. அத்தகைய பண்பில் கோழைத்தனமும், செயற்கை தனமுமே குடிகொண்டிருக்கும்.

இரு நபர்கள் மற்றும் இரு குழுவினருக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளில் பாரபட்சம் காட்டாமல் நீதியை இறுகப்பற்றிப் பிடிக்க வேண்டியது முஸ்லிமின் கடமையாகும். நீதி முஸ்லிம்களின் பக்கம் என்றால் மௌனம் சாதிப்பதும், முஸ்லிமல்லாதவர்கள் என்றால் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ ஆதரவாக வாதிடும் போக்கும் சிலரிடம் காணப்படுகிறது. அவர்களை பயம் இறுக்கியுள்ளது. அவர்களின் கொள்கை வாழ்வு கடினமானதாகவே இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அநீதியான விஷயத்தின் பால் அழைப்பு விடுத்து அதற்காக கோபித்து கண்மூடித்தனமான தலைமையின் கீழ் போராடி மரணிப்பவர் அறியாமை கால மரணத்தை தழுவுகிறார்.” (நூல்: இப்னுமாஜா)

Comments are closed.