குர்மெஹர் கவுருக்கு ஆதரவாக களம் இறங்கிய முன்னாள் இராணுவத்தினர். பாஜக ஆர்எஸ்எஸ் மீது கடும் தாக்கு

0

கார்கில் போரில் தனது தந்தையை இழந்த டில்லி பல்கலைகழக மாணவியான குர்மெஹர் கவுருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னாள் இராணுவத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 150 பேர் பங்கெடுத்த இந்த போராட்டம் SEWA எனப்படும் State Ex-servicemen Welfare Association என்ற அமைப்பின் கீழ் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் SEWA அமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற கலோனல் குல்திப் கிரிவால், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் மாணவ அமைப்பான ஏபிவிபி தங்களது கொள்கைகளை அறிவிக்கப்படாத சட்டமாக மாறிவருகிறது என்றும் அவர்களின் தவறுகள் குறித்து எதுவும் வாய் திறக்காமல் ஆளும் பாஜக அமைத்து காத்துவருகிறது என்று கூறியுள்ளார்.

தேசியவாதம் என்ற சொல்லின் அர்த்தம் திரிக்கப்பட்டு ஒரு வித அடிப்படைவாதத்தை மக்களிடையே திணிக்க பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் கல்வி நிலையங்கள் அரசியல் சார்பு இயக்கங்களின் போர்களமாக ஆகியுள்ளது என்றும் அமைதியை விரும்பும் மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அமைப்பின் உறுப்பினர்கள், எந்தவித அரசியலையும் சாராத இராணுவப்படை தற்போது அதன் மையம் வரை அரசியலாக்கப்பட்டுள்ளது என்றும் எதிரிகளுக்கு எதிரான அதன் நடவடிக்கள் அரசியல் இலாபங்களுக்காக உண்மைக்கு புறம்பாக பெரிது படுத்தி காட்டப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் எதிரிக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் இரகசியம் காக்கப்பட வேண்டும் என்றும் அவை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இத்துடன் கல்லூரி வளாகங்களில் நடக்கும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் குற்றம் புரிந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். குர்மெஹர் கவுருக்கு தங்களது ஆதரவை தெரிவித்த அவர்கள், தற்போதுள்ள இந்த வழக்கம் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்று கூறியுள்ளனர். அதனால் இது உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் மாணவ அமைப்புகள் மக்களை தூண்டிவிட்டு பிளவு படுத்துவது தடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Comments are closed.