குற்றப்பின்னணி இல்லாத 20 வயது முஸ்லிம் இளைஞரை சுட்டுக் கொன்ற உ.பி. காவல்துறை

0

குற்றப்பின்னணி இல்லாத 20 வயது முஸ்லிம் இளைஞரை சுட்டுக் கொன்ற உ.பி. காவல்துறை

உத்திர பிரதேச மாநிலம் முஸஃபர்நகரை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளைஞர் இர்ஷாத் அஹமத். இவர் காவல்துறை உடனான மோதலில் கொல்லப்பட்டுள்ளார் என்று உத்திர பிரதேச காவல்துறை செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து தனது கருத்தை தெரிவித்த இர்ஷாத்தின் 65 வயது தந்தை முஹம்மத் தில்ஷாத், தனது மகனுக்கு எந்த ஒரு குற்றப்பின்னணியும் கிடையாது என்றும் அவருக்கு எதிராக போக்குவரத்து மீறலுக்கான அபராதம் கூட கிடையாது என்றும் அப்படியான தனது மகனை உத்திர பிரதேச காவல்துறை இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொலை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதித்யநாதிற்கு அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி, இர்ஷாத் மற்றும் அவருடன் சேர்ந்த நான்கு பேர் வாகனம் ஒன்றில் மாடுகளை ஏற்றிச் சென்றதாகவும் தங்களை பார்த்த அவர்கள் தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக்வும் அதனால் தாங்கள் திருப்பிச் சுட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மீரட் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவிக்கையில், “(மாடுகளை ஏற்றிச் சென்ற) அந்த வாகனம் காவல்துறை ரோந்து வாகனத்தை கண்டதும் திரும்பியது. சிறிது தூரம் அவர்களை காவல்துறை துரைத்திய போது காவல்துறை வாகனத்தை அவர்களின் வாகனத்தை கொண்டு அவர்கள் இடித்தனர். பின்னர் கர்களையும் பாட்டில்களைக் கொண்டு காவல்துறை வாகனம் மீது எறிந்தனர். இரு பக்கமும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இர்ஷாதிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமணியில் உயிரிழந்தார்.”

இந்த சம்பவம் இர்ஷத்தின் கிராமத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்றுள்ளது. இர்ஷத்தின் கிராம மக்களோ இதிவரை இர்ஷத் வாகனத்தை ஓட்டி தாங்கள் பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இர்ஷத்தின் அண்டை வீட்டை சேர்ந்த ஃபர்மான் அகமத், முந்தைய இரவு 10 மணியளவில் தன் வீட்டின் வெளியே இர்ஷத் உறங்கிக் கொண்டிருப்பதை தான் கண்டதாகவும் மறுநாள் இப்படியான செய்தி ஒன்றை தான் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதில் ஆர்ச்சர்யம் என்னவென்றால் இர்ஷத் தனது வாழ்நாளில் வாகனம் ஓட்டியதே இல்லை என்றும் அவருக்கு வாகனம் ஓட்டத் தெரியாது என்றும் ஃபர்மான் தெரிவித்துள்ளார்.

“திங்களன்று இரவு தாமதமாக இர்ஷத் வீட்டிற்கு வந்தான். நானும் அன்றைய பொழுது ஓய்வெடுக்க சென்றுவிட்டேன். அவனை எப்போது அவர்கள் தூக்கிச் சென்று சுட்டுக் கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை.” என்று இர்ஷத்தின் தந்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக சக ஊழியர் ஒருவரை அவரது வீட்டில் விடச் சென்ற 38 வயது ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் மீது உத்திர பிரதேச காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் காவல்துறை தாங்கள் தற்காப்பிற்காக சுட்டதாக தெரிவித்திருந்தது.

Leave A Reply