குற்றப் பின்னணியுள்ள அதிகாரிகளை மீண்டும் பணியமர்த்தும் குஜராத் அரசு

0

இஷ்ரத் ஜஹான் மற்றும் சாதிக் ஜமால் போலி என்கெளவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ள என்கெளவுண்டர் ஸ்பெசலிஸ்ட் தருண் பரோட் ஐ அவரது பதவியில் இருந்து ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் கழித்து குஜராத் அரசு மீண்டும் பணியமர்த்தியுள்ளது.

காவல்துறை துணை கண்காணிப்பாளராக ஓய்வுபெற்ற தருண் பரோட் ஐ வதோதரா மேற்கு ரயில்வே தலைமையக காவல்துறை துணை கண்காணிப்பாளராக ஒரு வருட ஒப்பந்தத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு இவர் தனது பணியில் இருந்து ஓய்வு பெரும் போது சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர்,“கடவுள் இதனை செய்துள்ளார். நான் கூறுவதற்கு வேறென்ன உள்ளது” என்று கூறியுள்ளார்.

சொராபுதீன் ஷேக் வழக்கில் கைது செய்யபப்ட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட மற்றுமோர் காவல்துறை அதிகாரியான பி.ஆர்.சவ்பே குஜராத் மாநில ரிசர்வ் போலிஸ் படையின் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் 2014 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு மும்பையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை தொடர்பு அதிகாரியாக மீண்டும் பணியமர்த்தப்பட்டார். இவரது பிணை நிபந்தனைகளின் படி அவர் மும்பையைத் தாண்டி எங்கும் செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சமீபத்தில் அவரது பிணை நிபந்தனை மாற்றம் செய்யப்பட்டு அவர் குஜராத் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதோடு சொராபுதீன் ஷேக் வழக்கில் சி.பி.ஐ யினால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் ராஜ்குமார் பாண்டியன் மற்றும் அபே சுடாசமா ஆகிய இருவரை இன்ஸ்பெக்டர் ஜெனெரலாகவும், துணை இன்ஸ்பெக்டர் ஜெனெரலாகவும் குஜராத் அரசு பணியமர்த்தியுள்ளது.

Comments are closed.