குற்றப் பின்னணி உள்ள அமித்ஷா தேசப்பற்று சான்றிதழ்களை வழங்கக் கூடாது: ஆம் ஆத்மி கட்சி

0

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்தியதாக கூறப்படும் Surgical Strikes குறித்த விவாதங்கள் பரவலாக நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ.க தலைவரான அமித்ஷா குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. அதில், நாடுமுழுவதும் அறியப்படும் குற்றப்பின்னணி கொண்டவர் தேசப்பற்று சான்றிதழ்களை வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

தேசியவாதத்தை பொறுத்தவரை டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முன் நிற்க தகுதியில்லாதவர் அமித் ஷா என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.  மேலும் அமித்ஷா அரசியல் கொள்கைகளுக்கு ஏற்பட்ட கரும்புள்ளி என்றும் கேஜிரிவாளின் பேரைக் கூறக் கூட அவருக்கு அருகதை இல்லை என்றும் அக்கட்சி கூறியுள்ளது. ஒட்டுமொத்த நாட்டிற்கே அவரது குற்றப்பின்னணி தெரியும் என்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

டில்லி துணை முதல்வர் மற்றும் மூத்த ஆம் ஆத்மி தலைவரான மனிஷ் சிசோடியா,”தேசப்பற்று மற்றும் நேர்மைக்கான சான்றிதழ்களை அமித்ஷா வழங்குவது ஆச்சர்யமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமித்ஷா பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் 2014 டிசம்பர் 30  ஆம் தேதி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டார்.

இராணுவம் நம்முடையது என்றும் பா.ஜ.க எப்படி ராணுவம் மற்றும் தேசப்பற்றின் ஒப்பந்தக்காரர்கள் ஆனது என்று சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

“கெஜ்ரிவாலின் தேசப்பற்று குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகின்றார்களா? ஒட்டுமொத்த நாடே அவரின் தேசப்பற்று குறித்து அறியும். தேசப்பற்றை பொறுத்தவரை கேஜிரிவாளின் அருகில் அமித்ஷா வரமுடியுமா?” என்று சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது அனைத்தும் பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து கேஜிரிவாலை அமித்ஷா விமர்சித்ததால் ஏற்பட்டுள்ளது.

Comments are closed.