குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறி 11 நாட்கள் ஆகியும் சிறையில் வாடும் குல்சார் அஹமத் வாணி

0

சபர்மதி எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் குற்றமற்றவர் என்று பாரபங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் கஷ்மீரி PhD அறிஞ்சர் குல்சார் அஹமத் வாணி. இவர் குற்றமற்றவர் என்ற தீர்ப்பு வெளியாகி 11 நாட்கள் ஆகியும் சிறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயலால் இன்னும் சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் உள்ளார்.

குல்சார் அஹமத் வாணியின் வழக்கறிஞரின் கூற்றுப்படி இவர் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் நாக்பூர் சிறை ஆவணங்களில் இவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் லக்னோ சிறையில் இருந்து அவரை நாக்பூர் சிறைக்கு மாற்றம் செய்ய ஒன்பது நாட்களாக போதிய காவலர்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறை ஆவணங்களில் பிழை உள்ளது என்றும் அது சரி செய்யப்படும் என்றும் அதன் பின்னர் அவர் நாக்பூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து விடுவிக்கப்படுவார் என்று குல்சாரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த குல்சார் அஹமத் வாணியின் சகோதரர் முதஸ்சிர் குலாம் வாணி, “சிறை மாற்றத்திற்கான கட்டணத்தை எங்கள் தந்தை மே மாதம் 20 ஆம் தேதியே செலுத்திவிட்டார். ஆனால் பத்து நாட்கள் ஆகியும் குல்சார் வாணி இன்னும் மாற்றப்படவில்லை” என்று கூறியுள்ளார். இவர் தனது மற்றொரு சகோதரருடன் நாக்பூரில் கடந்த மூன்று நாட்களாக குல்சாருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

“நாங்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல இங்கு வந்தோம். இதில் ஏன் தாமதம் என்று நாங்கள் அறிய முற்பட்ட பொது போதிய காவலர்கள் இல்லை என்று சிறை அதிகாரிகளால் கூறப்பட்டது.’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் லக்னோ மாவட்ட சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் கேள்வி எழுப்பவே, முன்னதாக காவலர்களை ஏற்பாடு செய்வதில் சிக்கல்கள் இருந்ததாகவும் ஆனால் மே 29 ஆம் தேதி அவர் நாக்பூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இப்படியிருக்க நாக்பூர் சிறை நிர்வாகமோ கடந்த 31 ஆம் தேதி குல்சார் அஹமத் வாணி குறித்து தங்களுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் அப்படி எந்த ஒரு கைதியும் தங்களிடம் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குல்சார் அஹமத்தின் குடும்பம் கவலையில் ஆழ்ந்துள்ளது. 29 ஆம் தேதி லக்னோவில் இருந்து அனுப்பப்பட்ட அவர் 31 ஆம் தேதி வரை எப்படி நாக்பூர் வந்தடையாமல் இருக்க முடியும் என்று முதஸ்சிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

44 வயதுடைய குல்சார் வாணி 16 வருடங்களுக்குப் பிறகு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது என்று கூறி விடுவிக்கப்பட்டார். (பார்க்க செய்தி)

Comments are closed.