குற்றவாளிகளை தப்ப வைக்கும் என்.ஐ.ஏ.!

0

குற்றவாளிகளை தப்ப வைக்கும் என்.ஐ.ஏ.!

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) குற்ற புலனாய்வு அமைப்பா? அல்லது சங்பரிவாரின் துணை அமைப்பா? காவி பயங்கரவாதத்திற்கு எதிரான வழக்குகள் ஒவ்வொன்றாக தள்ளுபடியாகும் சூழலில் என்.ஐ.ஏ. மீது நிலவும் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் வழக்கு. சுவாமி அசிமானந்தா உள்ளிட்ட குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவித்ததற்கு, குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு அரசு தரப்பு தவறியதே காரணமாகும். என்.ஐ.ஏ. ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததே வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதற்கு காரணம் என்று இந்த வழக்கை துவக்கத்தில் விசாரித்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி விகாஸ் நாராயணன் ராய் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். சூட்கேஸ்களை பயன்படுத்தி டெல்லியிலிருந்து லாகூருக்கு செல்லும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்துத்துவ பயங்கரவாதிகள் 2007 பிப்ரவரி 18-ம் தேதி குண்டுவெடிப்பை நிகழ்த்தினர். அந்த சூட்கேஸ்களின் உறைவிடத்தையும், அவை வாங்கப்பட்ட இந்தூரில் உள்ள கடையையும் விகாஸ் நாராயணன் ராய்தான் கண்டுபிடித்தார்.

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ், மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய குண்டுவெடிப்புகளில் தனக்கும், பல சங்பரிவார உறுப்பினர்களுக்கும் நேரடியான தொடர்பிருப்பதாக சுவாமி அசீமானந்தா 2010 டிசம்பரில் டெல்லி தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.சதித்திட்டம் தீட்டியதிலும், நிதியுதவி அளித்ததிலும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதிலும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பல பிரச்சாரக்குகளுக்கும் நேரடி தொடர்பிருப்பதாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பல கிளை அமைப்புகளின் தலைவர்களுக்கும் குண்டுவெடிப்புகளில் பங்கிருப்பதை அசீமானந்தா வெளிப்படையாக தெரிவித்தார். சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து குண்டுவெடிப்புகளை நடத்த சதித்திட்டம் தீட்டியது தொடர்பான விரிவான விளக்கங்களும் உரையாடல்களும் நீண்ட இந்த வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ளன.

‘நானும் எனது சகாக்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலீம் என்ற இளைஞரை எதேச்சையாக சந்தித்ததே நாங்கள் செய்த குற்றத்தை வெளிப்படையாக கூற தூண்டியது’ என்றும், தங்கள் மீது எவ்வித அழுத்தமும் கிடையாது என்றும் அசிமானந்தா தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இந்த தகவல் ஊடகங்களுக்கு கசிந்ததைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரதீய அதிவக்த பரிஷத் அசிமானந்தாவிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு காட்சிகள் மாறின. ஒப்புதல் வாக்குமூலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக பல்டியடித்தார்.

குண்டுவெடிப்பு வழக்குகளின் விசாரணை துவக்கத்தில் சரியான பாதையில் நகர்ந்தது. மத்தியில் ஆட்சி பாசிச சக்திகளின் கரங்களுக்கு சென்ற பிறகு என்.ஐ.ஏ.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் குற்றவாளிகளாக்கப்பட்டு, இந்துத்துவாவினர் ஒவ்வொருவராக குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறியது. 2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என்று துவக்கத்தில் கூறிய என்.ஐ.ஏ. பின்னர் நிலைப்பாட்டை மாற்றி அவர்களின் விடுதலையை தடுத்தது. 2008ல் இரண்டாவது முறையாக மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கின் சாட்சியங்களின் வாக்குமூலம் என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்திலிருந்து காணாமல் போனதன் பின்னணியில் உள்ள மர்மம் விலகவில்லை. அதனைத் தொடர்ந்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர், கர்னல் புரோகித் உள்ளிட்ட 14 இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு என்.ஐ.ஏ. நற்சான்றிதழ் வழங்கியது.

குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்ட புலனாய்வு ஏஜன்சியே அவர்களுக்கெதிரான குற்றப்பிரிவுகளை நீக்குவதற்கு நீதிமன்றத்தில் கோரும் முட்டாள்தனம் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதிகள் தொடர்புடைய வழக்குகளில் மட்டுமே அரங்கேறுகிறது. இதர வழக்குகளில் கடுமையான பிரிவுகளை சுமத்துவதற்கு என்.ஐ.ஏ. சிறப்பு கவனம் செலுத்துகிறது. ஏற்கனவே ஹாதியா தொடர்பான சிவில் வழக்கை, தீவிரவாதமாக சித்தரிக்க என்.ஐ.ஏ. கடும் முயற்சி எடுத்ததை நாம் அறிவோம். இனியும் என்.ஐ.ஏ.வுக்காக அரசு பணத்தை செலவழிப்பது வீண் செலவாகும். ஆகவே, அதனை கலைத்து விடுவதே நாட்டு நலனுக்கு உகந்தது.

Comments are closed.