குல்பர்க் சொசைடி படுகொலைகளுக்கு காரணம் இஹ்சான் ஜாஃபரி தான்: நீதிபதி பி.பி.தேசாய்

0

2002 குஜராத் கலவரத்தின் குல்பர்க் சொசைடி கொலை வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் குல்பர்க் சொசைடியில் 69 பேர் கொல்லப்பட்டதற்கு இஹ்சான் ஜாஃபரி தான் காரணம் என்று கூறியுள்ளார்.

குல்பர்க் சொசைடி முன்பு திரண்டிருந்த கும்பல் வெறும் கற்களை எரிந்தும், சிறுமான்மை சமூகத்தை சேர்ந்த மக்களின் பொருட்களை தீயிட்டு கொளுத்தியும், வாகனங்களை சேதப்படுத்தியும் தான் இருந்ததாகவும் இஹ்சான் ஜாஃபரி அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும் தான் அவர்கள் கொலை வெறித் தாக்குதல்களில் ஈடு பட்டு அதில் 69 பேர் மரணித்ததாகவும் கூறியுள்ளார். இதனாலேயே பல பெண்களும் குழந்தைகளும் இந்த சம்பவத்தில் மரணிக்க நேர்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அந்த கும்பலின் மீது இஹ்சான் ஜாஃபரி சொசைட்டியின் உள்ளிருந்த பல இடங்களில் இருந்து தனிச்சையாக துப்பாக்கி சூடு நடத்த அக்கூட்டத்தினரில் சிலர் உயிரிழந்ததாகவும், அதன் பிறகே அந்த கும்பல் கொலைகார கும்பலாக உருவெடுத்தது என்று கூறியுள்ளார்.

மேலும் ஆதாரங்களின் படி இஹ்சான் ஜாஃபரியின் வீடு மட்டும் தான் குறிப்பாக அந்த கும்பலால் தாக்கப்பட்டுள்ளது என்றும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த தீ எரிப்பு சம்பவத்தில் புகை மற்றும் தீயை சமாளிக்க முடியாமல் வெளியேறியவர்களை அந்த கும்பல் தாக்கிக் கொலை செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இவ்வழக்கின் வாதத் தரப்பு இஹ்சான் ஜாஃபரி ஒரு தோட்டாவைக் கூட சுட வில்லை என்று கூறி வருகிறது. ஆனால் இதனை சிறிதும் செவிமடுக்காத நீதிபதி காவல்துறையின் சாட்சியத்தையும் அவர்கள் ஆதாரங்களாக சமர்ப்பித்த காலி தோட்டாக்களையும் முழுவதுமாக சார்ந்து தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் குல்பர்க் சொசைடியின் முன் கொலைகார கும்பல் கூடியதில் இருந்து அங்குள்ள மக்களை கூட்டாக கொலை செய்தவரை எதையும் தடுக்க முற்படாமல் அனைத்தையும் இந்த காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இந்த கொலைகளில் காவல்துறையின் மறைமுக ஈடுபாடு சந்தேகிக்கபப்ட வேண்டிய தருணத்தில் இந்த காவல்துறையினரின் சாட்சிகளை வைத்து நீதிபதி தந்து தீர்ப்புகளை வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டுதல் என்பது முக்கியமானது. இந்த கொலைகளில் ஈடுபட்ட பெரும்புள்ளிகளை சிக்க வைக்க இதுவே முதல் படி. ஆனால் இதனையும் நீதிபதி மறுத்துள்ளார். மோடி குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வழக்குகளில் இது தான் கடைசியான வழக்கு என்பதாலும் அதிகாரத்தில் இருக்கும் நபர்களை காப்பாற்ற இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

குல்பர்க் சொசைடி படுகொலை நிகழ்ந்த அதே பிப்ரவரி 28 ஆம் தேதி குல்பர்க் சொசைடியில் இருந்து வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரோதா பாட்டியாவில் 97 பேர் காலை முதல் மாலை வரை கொலை செய்யப்பட்டும் கற்பழிக்கப்பட்டும் துண்டாடப்பட்டனர். இந்த வழக்கிலும் காவல்துறையினர் இங்கு நடைபெறும் படுகொலைகள் குறித்த அனைத்து அறிவும் இருந்தும் அதனை தடுக்க எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை.

மேலும் Call Detail Records (CDRs) என்ற தொலைபேசி அழைப்பு தகவலின் படி குல்பர்க் சொசைடி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அதுல் வைத்யா நரோடா பாட்டியா படுகொலையில் குற்றவாளியாக சேர்க்கபப்ட்ட பாபு பஜிரங்கியுடன் தொலைபேசி உரையாடல்கள் நிகழ்த்தியதும், நரோடா பாட்டியா படுகொலையின் முக்கிய குற்றவாளி விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் ஜெய்தீப் படேல் உடன் தொலைபேசி உரையாடல் நிகழ்த்தியதும் தெரியவந்துள்ளது.

நரோடா பாட்டியா வழக்கில் சத்திதிட்டம் தீட்டியதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அப்போதைய எம்.எல்.ஏ வான மாயா கொட்னாணியை இந்த கொலைகளுக்கு மூலகர்த்தாவாக கருதி குற்றவாளி என்று தீர்பளித்திருந்தது.

குல்பர்க் சொசைட்டி வழக்கில் சதித்திட்டம் தீட்டுதலை நீதிமன்றம் நிராகரித்தது குறித்து கொலை செய்யப்பட்ட இஹ்சான் ஜாஃபரியின் மகன் தன்வீர் கூறுகையில், இந்த வழக்கில் சதித்திட்டம் இல்லை என்றால் காவல்துறை ஏன் பாதிக்கப்படுபவர்களின் உதவிக்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குல்பர்க் சொசைட்டி வன்முறையின் தனது மகனை இழந்த ரூபாபென் மோதி இந்த கலவரத்தில் காவல்துறையின் பங்கு குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். “இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கே.ஜி.எர்டா (குல்பர்க் சொசைட்டி யின் பொறுப்பு காவல்துறை அதிகாரி) அந்த கொலைகார கும்பலின் தலைவர்கள் அனைவரையும் அறிந்தவர். நான் என் மகனை தேடிக்கொண்டிருந்த போது அந்த கும்பலின் தலைவர்களுடனான சந்திப்பை அவர் தான் ஏற்படுத்தித்தந்தார். அவர்களிடம் எனது மகனின் புகைப்படத்தை காண்பித்தேன். அவர்கள் என் மகனை கொலை செய்யவில்லை என்று கூறினார். காணாமல் போன என் மகனின் விசாரணை குறித்து எர்டா செய்தது அவ்வளவு தான்” என்று ரூபாபென் கூறியுள்ளார்.

இது குறித்து Citizens for Justice and Peace (CJP) அமைப்பின் செயலாளரான டீஸ்டா செதல்வாட் கூறுகையில், இவ்வழக்கின் முதல் நாள் தொட்டே நரோடா பாட்டியா வன்முறையும் குல்பர்க் சொசைட்டி வன்முறையும் ஒரே மாதிரியானவை என்றும் இந்த இரு வழக்கின் குற்றவாளிகளையும் ஒன்று போல் நடத்த வேண்டும் என்றும் தான் கூறியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த இரு வழக்கிலும் காவல்துறை அங்கு நடக்கும் வன்முறைகள் குறித்து நன்கு அறிந்தவர்களாகவே இருந்தனர் என்றும் ஆனால் அதனை தடுக்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இந்த இரு வழக்கிலும் மாநில அதிகாரிகள் குற்றத்திற்கு துணை புரிந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.