குழந்தைக்கு உணவு கொடுபதற்காக விரைந்த ஃபலஸ்தீன பெண்ணை 17 முறை சுட்ட இஸ்ரேல் எல்லை பாதுகாப்பு படை

0

38 வயதான மஹதியா ஹம்மத் என்ற பெண் நான்கு குழந்தைகளுக்கு தாய் ஆவார். தன் குழந்தைக்கு உணவு கொடுப்பதற்காக காரில் விரைந்து சென்ற இவரை தங்கள் மீது கார் ஏற்றி கொலை செய்ய முற்பட்டார் என்கிற சாக்கு கூறி இஸ்ரேலிய ராணுவம் சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளது. 17 முறை சுடப்பட்ட அவர் இரத்த வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். இவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

ஃபலஸ்தீனின் சில்வாத் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. தனது மனைவிக்கு காரை ஓட்டுவதில் அவ்வளவு அனுபவம் கிடையாதென்றும் இஸ்ரேலிய ராணுவத்தை கண்ட தனது மனைவி அச்சத்தின் காரணமாக காரை சரியாக ஓட்டமுடியவில்லை என்றும் அவரின் கணவர் தெரிவித்தார். ஹம்மாத் வாகனத்தை மிகவும் மெதுவாக ஓட்டிச் சென்றதாகவும் அவர் இறந்த பின்னரும் கூட இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி சூட்டை நிறுத்தவில்லை என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சமீபகாலமாக ஃபலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக்கொல்வது அதிகரித்துள்ளது. ஹம்மத் கொலைக்கு சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு ஃபலஸ்தீனியர் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். ராணுவத்தினரை கத்தியால் குத்த வந்தார் என்று அவரது கொலைக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது. அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து இதுவரை இஸ்ரேலிய படையால் சுட்டுக்கொள்ளபட்ட ஃபலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 138. இதில் 26 சிறுவர்களும் அடக்கம்.

Comments are closed.