குழந்தை கடத்தல் வழக்கில் சிக்கிய பாஜக: கட்சியில் விரிசல்

1

மேற்கு வங்கத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்திய கும்பலுடன் பாஜக மகிலா மோர்ச்சா தலைவர் ஜுஹி சவுத்திரிக்கு தொடர்பிருப்பதை அடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனமான பிமலா சிஷு கிரிஹா என்ற அமைப்பின் தலைவர் சந்தனா சக்கரபோர்தி மற்றும் சோனாலி மொண்டோல் என்ற இரண்டு அதிகாரிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த குழந்தை கடத்தல் கும்பல் இதுவரை 20க்கும் மேற்ப்பட்ட குழந்தைகளை நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும், அமெரிக்க, ஃபிரான்ஸ், போன்ற நாடுகளுக்கும் விற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இந்த குழந்தை கடத்தல் கும்பலுக்கும் பாஜக வின் ஜுஹி சவுத்திரிக்கும் உண்டான நெருக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது ஒரு முறை தன்னிடம் சந்தனா மாநில அரசின் மீது ஒரு புகாருடன் வந்ததாகவும் அவரை அதற்கு தான் வழிகாட்டியதாகவும் அப்படித்தான் அவரை தெரியும் என்றும் அதன் பின் அவரிடம் இருந்து எந்த ஒரு செய்தியும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் சி.ஐ.டி அதிகாரிகளோ ஜுஹி சவுத்திரி சந்தனா சக்ரபோர்த்தியை டில்லி க்கு மத்திய அரசு அதிகாரிகளை சந்திப்பதற்காக அழைத்து சென்றதாகவும் அவர்கள் இருவரும் பலமுறை சந்தித்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

இந்த கடத்தல் கும்பல் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் பல இடங்களில் தாங்கள் சோதனை செய்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஜுஹி சவுத்திரியை பாஜக வின் பொதுச் செயலாளராக்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் பரிந்துரைத்ததாக ராஜிய சபா எம்.பி. யும் மேற்கு வாங்க மாநில பாஜக பெண்கள் பிரிவும் தலைவருமான ரூபா கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “திலிப் கோஷ் என்னை அவரது அறைக்கு அழைத்து ஜுஹி சவுத்திரியை பொதுச் செயலாளராக்க கூறியதை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள்.” என்று கூறியுள்ளார்.

மேலும் பிரதாப் பந்த்யோபதாய் கையெழுத்திட்ட ஆவணம் ஒன்றில் அவர் ஜுஹியின் பெயரை பொதுச் செயலாளராக குறிப்பிட்டிருந்தார். அதன் மூலமே நான் அவரை அறிந்து கொண்டேன். தற்போது அவரை எனக்கு ஐந்து முதல் ஆறு மாதங்கள் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Discussion1 Comment

  1. அனைத்து விதமான க்ரிமினல் குற்றவாளிகளுக்கும் பாஜக வில் இடம் உண்டு. இதை எப்போது தேசப்பற்றாளர்கள் புரிந்து கொள்வார்களோ ?