குவாண்டனாமோ: எட்டு வருடங்களாக உண்ணாவிரதம் இருப்பவரை விடுவிக்க அமெரிக்கா மறுப்பு

0

அமெரிக்காவின் கொடூரமான குவாண்டனாமோ சிறையில் 2007 முதல் உண்ணாவிரதம் இருக்கும் சிறைக்கைதி ஒருவரை விடுவிப்பதற்கு அமெரிக்கா மறுத்து வருகிறது. ஃபோர்ஸ் ஃபீடிங் எனப்டும் கட்டாயப்படுத்தி உணவு செலுத்தும் முறை பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டதால் அவரின் உடம்பு இனி ஆகாரங்களை ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலைக்கு வந்துள்ளது.
உண்ணாவிரதம் காரணமாக அவரின் எடை 33 கிலோவிற்கு குறைந்துள்ளதாகவும் இதே நிலை தொடர்ந்தால் அவர் விரைவில் மரணித்து விடுவார் என்றும் வழக்கறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சவூதி குடியுரிமை பெற்ற தாரிக் உதய் என்ற அந்த நபர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு 2002 முதல் குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டுள்ளார்.
எவ்வித குற்றமும் சுமத்தப்படாமல் தன்னை சிறையில் அடைத்ததை கண்டித்து தாரிக் 2007 முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். 2009ல் ஒபாமா அரசாங்கம் அவரை விடுவிப்பதற்கு அனுமதி கொடுத்த போதும் சிறை அதிகாரிகள் அவரை விடுவிக்காமல் இருந்து வருகின்றனர்.
மரண தருவாயில் இருக்கும் தாரிக்கை விடுவிக்க மறுப்பதன் மூலம் ஒபாமா அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாக அவரின் வழக்கறிஞர்கள் கூறினர். உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு கட்டாயப்படுத்தி உணவு செலுத்தும் பழக்கம் குவாண்டனாமோவில் நடைமுறையில் உள்ளது. மூக்கின் வழியாக டியூப்களை செலுத்தி உணவை செலுத்தும் இந்த கொடூரமான முறைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.