குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏமன் நாட்டவர்கள் விடுவிப்பு

0

அமெரிக்க அரசால் குவாண்டனாமோ சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் சவூதி அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஒபாமா அரசு வருகிற ஜனவரி 20 ஆம் தேதிக்குள் குவாண்டனாமோ கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான நடவடிக்கையை தொடர்ந்து இந்த கைதிகளை சவூதிக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா.

இத்துனை காலம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சவுதி விமான நிலையத்தில் தங்களது உறவினர்களை கண்டதும் கண்ணீரில் மூழ்கினர்.

இது தொடர்பாக சவூதி உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், இவர்கள் முஹம்மத் பின் நயீஃப் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் போது இவர்களது குடும்பம் இவர்களை சந்திக்க தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறியுள்ளார்.

ஏமன் நாட்டின் ஜனாதிபதி அப்த் ரப்பு மன்சூர் கேட்டுக்கொண்டதின் படி இந்த கைதிகளை சவூதி அரசு பெற்றுக்கொண்டது. தற்போது சவுதிக்கு அனுப்பப்பட்ட நபர்களின் பெயர்களாவது, முஹம்மத் ரஜப் சாதிக் அபு கனிம், சலின் அஹ்மத் ஹாதி, அப்துல்லாஹ் யஹியா யூஸுப் அல் ஷாப்லி மற்றும் முஹம்மத் அலி அப்துல்லா பவாசிர்.

ஒபாமா 2009 இல் பதவியேற்ற போது, விசாரணை இல்லாமல் ஒருவரை சிறையில் அடைப்பது அமெரிக்க கோட்பாடு அல்ல என்று கூறி அந்த சிறையை மூட உறுதி எடுத்தார். அப்போது குவாண்டனாமோ சிறையில் இருந்த 240 கைதிகளில் தற்போது 59 பேர் மீதம் உள்ளனர். இவர்களில் மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ளவர்களே நீதிமன்றங்கள் முன் நிறுத்தப்பட்டு இங்கு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் அனைவரும் எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி விடுவிக்க முடியாத பயங்கரவாதிகள் என்று கூறி குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டவர்கள்.

இம்மாதம் ட்ரம்ப் பதவியேர்ப்புக்கு முன்னதாக ஏறத்தாழ 20 கைதிகள் இடமாற்றபப்டுவார்கள் என்று கருதப்படுகிறது. சென்ற வருட ஏப்ரல் மாதத்தில் 9  கைதிகள் குவாண்டனாமோவில் இருந்து சவூதி அனுப்பப்பட்டனர். இந்த ஒன்பது நபர்களும் அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த விடுவிப்பிற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தேடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குவாண்டனாமோவில் இருந்து கைதிகள் வெளியேற்றப்படுவது  குறித்து டொனால்ட் டிரம்ப் தெரிவிக்கையில், இதற்கும்மேலாக எந்த ஒரு கைதியும் குவாண்டனாமோவில் இருந்து விடுவிக்கப்பட கூடாது. இவர்கள் மிக ஆபத்தானவர்கள் என்றும் இவர்களை மீண்டும் போராட்டக்களத்தில் விடக்கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் குவாண்டனாமோவில் இன்னும் பலரை அடைக்கப் போவதாக கூறியுள்ளார்.

Comments are closed.